தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராக இருப்பவர் மனோ. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இசையுலகில் முடிசூடா சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். இவரது இனிமையான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பன்முக திறமைக்கொண்ட அவர், பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வந்தார். அந்த வகையில் கமலின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘சிங்காரவேலன்’ படத்தில் நடிகராக அறிமுகமாக சிறப்பாக நடித்தார். அதன்பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதோடு ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு தெலுங்கில் டப்பிங்கும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இசையுலகில் சாதனை படைத்த மனோவிற்கு பிரபல வெளிநாட்டு பல்கலை கழகம் ஒன்று, டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பாடகர் மனோ வெளியிட்டுள்ளார். அதில் 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்கள், 38 ஆண்டுகள் இசைத் துறையில் சாதனை புரிந்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக் கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. என் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.