“குடும்ப உறவுகள் குறித்தும், பெற்றோரை பாதுகாப்பது குறித்த கதை என்பதாலும் ருத்ரனை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்.” என்று தெரிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சமீபத்தில் வெளியாகியுள்ள ருத்ரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக மதுரையிலுள்ள கோபுரம் சினிமாஸ் அரங்கிற்கு வந்திருந்த நடிகர் ராகவா லாரன்ஸ். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
“ருத்ரன் படத்திற்கு மக்களின் ரியாக்சன் எப்படியுள்ளது?” என்றதற்கு,
“மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ருத்ரன். குடும்ப உறவுகள் குறித்தும் பெற்றோரை பாதுகாப்பது குறித்த கதை என்பதால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். என்னுடைய படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்ப்பது போல் இருக்கும்” என்றார்.
“படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு,
” எல்லா படங்களுக்கும் விமர்சனம் வரும். நல்ல படத்துக்கும் வரும். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் 3 வருடத்துக்கு முன் எழுதப்பட்டது. இடையில் கொரோனா வந்துவிட்டது. அதற்குப்பின் தான் படம் முடிக்கப்பட்டது. அதை வைத்து சிலர் விமர்சிக்கலாம். அதை கடந்து போய்விடலாம்”
“பாண்டி படம் போன்ற மக்களால் ரசிக்கப்பட்ட மதுரைக்கார ஹீரோவாக மீண்டும் நடிப்பீர்களா?” என்றதற்கு,
“நிச்சயமாக அதுபோல் கதையை யோசித்து வருகிறேன்” என்றார்.
“அடுத்து என்னென்ன படங்கள் வரவுள்ளது?”
“சந்திரமுகி-2 படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. விரைவில் வெளியாகும். அடுத்து ஜிகர்தண்டா-2-ன் வேலைகளும் நடந்து வருகிறது. இனி என் படங்கள் தாமதமில்லாமல் வெளியாகும்” என்றவரிடம்,
“பல முன்னணி ஹீரோக்களுக்கு கொரியோகிராஃப் பண்ணிய நீங்கள், அவர்களை வைத்து படம் இயக்குவீர்களா?” என்றதற்கு,
“பார்க்கலாம்!” என்றார்.