திருவனந்தபுரம் டூ கண்ணூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… 7 மணி நேரம் தான்… கேரளாவில் கொல மாஸ் பயணம்!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நகரங்களுக்கு இடையிலான 510 கிலோமீட்டர் தூரத்தை சாலை வழியாக கடக்க 12 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை

அதுவே ரயிலில் பயணித்தால் குறைந்தது 10 மணி நேரமாவது ஆகும். இந்நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் வெறும் 7 மணி நேரத்தில் கடந்து சென்றுவிடலாம் எனக் கணித்துள்ளனர். இந்த பாதையில் வந்தே பாரத் ரயில் தனது முதல் சோதனை ஓட்டத்தை இன்று (ஏப்ரல் 17) காலை தொடங்கியது. காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து 50 நிமிடங்களில் கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

திருவனந்தபுரம் டூ கண்ணூர்

அதன்பிறகு 2 மணி நேரம் 18 நிமிடங்களில் கோட்டயம் ரயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து 3 மணி நேரம் 18 நிமிடங்களில் எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் திருச்சூரை 4 மணி நேரம் 27 நிமிடங்களிலும், கோழிக்கோட்டிற்கு 6 மணி நேரம் 7 நிமிடங்களிலும் சென்றது. இறுதியாக கண்ணூர் ரயில் நிலையத்தை 7 மணி நேரம் 20 நிமிடங்களில் நண்பகல் 12.30 மணிக்கு சென்றடைந்தது.

கேரளாவில் முதல் சேவை

இதைக் காண வழி நெடுகிலும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். கேரளாவின் மேற்கு கடலோரப் பகுதியை முழுவதுமாக இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இருக்கும். வரும் ஏப்ரல் 25ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக ஏப்ரல் 24ஆம் தேதி கொச்சி வருகை புரிகிறார்.

பிரதமர் மோடி வருகை

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் ’யுவம்’ என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அடுத்த நாள் வெள்ளி அன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரம் டூ கண்ணூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும்.

இந்திய ரயில்வே முடிவு

அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். ஆனால் 110 கிலோமீட்டர் வேகம் போதும் என தற்போதைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.