ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கனுகுமாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பா ரெட்டி. இவர், புதிதாகக் கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீட்டின் எதிரில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறவினர்கள் சாமியானா பந்தலின் கீழ் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது வேகமாக அடித்த காற்று காரணமாக சாமியான பறந்து போய் மின்சார வயர் மீது விழுந்தது. சாமியானா போடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கட்டையில் இருந்த இரும்பு கம்பி மேல் மின்சாரம் பாயத்தொடங்கியுள்ளது. அதனை அருகில் இருந்த சிறுவன் பிடிக்க, அவன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனைக் கண்ட அவனுடைய பாட்டி சிறுவனைக் காப்பாற்றுவதாக அவனைப் பிடித்து இழுத்தார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தினால் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த உறவினர்கள் படுகாயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி மற்றும் கொத்தப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அவர்களில் 2 பேர் நடுவழியில் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில், மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகத் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.