ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மூர்ச்சுலா தாலுகா, துர்க்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ். இவர் அண்மையில் சென்னை ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர், “நான் கூலி வேலை செய்து வருகிறேன். காமல்லாபாடு மண்டலம், தாட்சியபள்ளி கிராமம், பள்ளநாடு மாவட்டத்தைச் சேர்ந்த புன்னாராவ் என்பவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர், மிடியாகுடாவில் தங்க நகைக்கடை நடத்தி வரும் கிருஷ்ணாராவ் என்பவரை எனக்கும் என் மனைவி லட்சுமிக்கும் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கிருஷ்ணாராவ் கொடுக்கும் பணத்தை சென்னைக்கு கொண்டு சென்று தங்க நகைகளை வாங்கிவரும்படி புன்னாராவ் எங்களிடம் தெரிவித்தார். அதற்கு, `குடும்பத்துக்குத் தேவையானப் பணத்தை செலவுக்குக் கொடுப்பார்’ என்று புன்னாராவ் தெரிவித்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் கிருஷ்ணராவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்துக்கு வந்து தங்க நகைகளை பெற்றுக் கொடுத்துவிட்டேன். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணாராவ், என்னையும் என் மனைவியையும் அழைத்து, என்.எஸ்.சி போஸ் ரோட்டில் தங்க நகைக்கடை நடத்தி வரும் ராஜ் என்பவரிடம் 60 லட்சம் ரூபாயைக் கொடுத்து… தங்க நகைகளை வாங்கி வரும்படி தெரிவித்தார். அதனால் நானும் என் மனைவியும் ஆந்திராவிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் வந்தோம். அப்போது பிடுகுரால் என்ற இடத்தில் எங்களின் நண்பர் புன்னாராவும் அந்தப் பேருந்தில் ஏறினார்.
சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் நாங்கள் மூன்று பேரும் பேருந்தைவிட்டு கீழே இறங்கினோம். அப்போது நகைக்கடை உரிமையாளர் அனுப்பிய காரை சதீஷ் என்பவர் ஓட்டி வந்தார். அந்த காரில் வெங்கடேஷ் என்பவர் அமர்ந்திருந்தார். பின்னர் நாங்கள் மூன்று பேரும் அந்த காரில் ஏறி கொருக்குப்பேட்டைக்குச் செல்லும்படி கூறினோம். டிரைவரும் அங்கு சென்றார். அப்போது என்னையும் என் மனைவியையும் கீழே இறங்கும்படி கூறிவிட்டு மற்றவர்கள் பாத்ரூம் செல்வதாக அந்தப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு காரில் சென்றனர். நானும் என் மனைவியும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நான்கு பேருடன் ஒரு கார் அங்கு வந்தது.
அந்த காரிலிருந்து இறங்கியவர்கள், தெலுங்கில் எங்களிடம் பேசினர். பின்னர் அவர்கள் `நீங்கள் மறைத்து வைத்திருக்கும் பணத்தை மரியாதையாக எங்களிடம் கொடுத்து விடுங்கள்… இல்லையென்றால் உங்கள் இருவரையும் கொலைசெய்து விடுவோம்’ என மிரட்டினர். அதனால் பயந்து நான் சட்டைக்கு உள்ளே அணிந்திருந்த கோட்டில் மறைத்து வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை கோட்டுடன் கழற்றி அவர்களிடம் கொடுத்தேன். என் மனைவி புடவைக்குள் துணிப்பையில் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். அதன்பிறகு எங்களின் செல்போன்களை பறித்துக் கொண்ட அந்தக் கும்பல், காரில் தப்பிச் சென்றுவிட்டது. பாத்ரூமுக்குச் சென்ற புன்னாராவ், வெங்கடேஷ், சதீஷ் ஆகியோர் அங்கு வரவில்லை.
உடனே நான் கிருஷ்ணாராவுக்கு போனில் விவரத்தைச் சொன்னேன். 60 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பூசைதுரை வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். கூடுதல் கமிஷனர் அன்பு உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். சுப்பாராவுடன் வந்த புன்னாராவ்மீது தனிப்படை போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனடிப்படையில் விசாரித்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெலங்கானா, நலகொண்டா மாவட்டம், மிடியாலக்குடா பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), தெலங்கானா, நரமண்டலு, உட்கூட் மண்டலத்தைச் சேர்ந்த ரமேஷ் பத்தினி (32), அவரின் சகோதரர் மதுபத்தினி (29), ஆந்திர மாநிலம், பள்ளநாடு, தாட்சயப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த புன்னாராவ் (35) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 20,81,500 ரூபாயை போலீஸார் மீட்டனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். “கைதுசெய்யப்பட்ட புன்னாராவ் என்பவர், சுப்பாராவை ஆந்திர மாநில நகை வியாபாரி கிருஷ்ணாராவிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதன்பேரில் சுப்பாராவ், பணத்துடன் சென்னைக்குச் செல்லும் தகவலை தெரிந்துகொண்ட புன்னாராவும் அவர்களோடே சென்னைக்கு வந்திருக்கிறார். பின்னர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் இரண்டு பேர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “புகார் கொடுத்த சுப்பாராவும் கைதுசெய்யப்பட்ட புன்னாராவும் நண்பர்கள். பணத்தைப் பார்த்ததும் மனமாறிய புன்னாராவ், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் சுப்பாராவ், அவரின் மனைவியை மிரட்டி 60 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.