கலாஷேத்ரா பாலியல் வழக்கில் விசாரணைக் குழுவை ஐகோர்ட் ஏன் நியமிக்கக் கூடாது? – உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது. குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், “எங்கள் அடையாளத்தை வெளியிடாமல் இந்த வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும். எங்கள் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளோம். கல்லூரியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாஷேத்ரா அறக்கட்டளை தவறிவிட்டது. பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்கத் கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது.பாலியல் தொல்லை தடுப்புக் கொள்கையை வகுக்கும் சட்டப்பூர்வ கடமையில் இருந்தும் கலாஷேத்ரா தவறிவிட்டது.

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தானாக முன்வந்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது சட்டவிரோதமானது. மாணவிகளின் புகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது.

புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கலாஷேத்ராவுக்கு தடை விதிக்கவேண்டும். பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்.பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழையவும், மாணவிகளிடம் கலந்துரையாடவும் தடை விதிக்கவேண்டும்.

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த கொள்கையை வகுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, “வெறும் கண்துடைப்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மாற்றியமைக்கப்படவில்லை” எனவும் குற்றம்சாட்டினார்.

அப்போது கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது” என உத்தரவாதம் அளித்தார்.

மேலும், “பாலியல் தொல்லை அளித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாகத்தில் தலையிடவோ, வளாகத்தில் நுழையவோ அனுமதியில்லை” என்று உறுதி அளித்தார்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “கலாஷேத்ரா வழக்கு நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையவில்லை. நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாணவிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தும் உத்தரவிட்டார். அதேபோல், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், மாணவிகளுடன் தொடர்பு கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மாநில மகளிர் ஆணைய அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு கலாஷேத்ரா அறக்கட்டளை, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.