திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்; போலி டிக்கெட்டுகள்; போலீஸில் புகார்; நடந்தது என்ன?

திருமலை திருப்பதி பெருமாளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறையேனும் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.

எனவே சாதாரண நாள்களிலேயே 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடும். தற்போது கோடை விடுமுறை தொடங்க இருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திருமலை திருப்பதி

எனவே தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணைய வெளியான உடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இலவச மற்றும் ஸ்லாட்டட் தரிசனத்துக்கான வரிசை மிக நீண்டதாக மாறியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தர்கள் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் தொடங்கி தரிசன டிக்கெட்களை விற்பனை செய்கின்றனர். இணையதளமும் டிக்கெட்களும் போலியானவை என்பதை அறியாமல் பக்தர்கள் அதை வாங்குகிறார்கள். தரிசனத்துக்குச் செல்வதற்கு முன்பாக தேவஸ்தான ஊழியர்களின் சோதனையின் போது அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இதனால் போலி டிக்கெட் எடுத்து பணத்தை இழந்த பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தரிசன டிக்கெட்கள் மட்டுமில்லாது தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவுகள் செய்வதாகவும் இந்த இணைய தளங்கள் பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

திருமலை திருப்பதி

சமீபத்தில் இத்தகைய புகார்கள் அதிகரித்து வந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆய்வில் இறங்கி சுமார் 40 க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் போலி டிக்கெட்கள் விற்பனை செய்வதைக் கண்டறிந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தகவல் தொழில் நுட்பப்பிரிவு அதிகாரியான சந்தீப் ரெட்டி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸிடம் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளது.

அதில் தேவஸ்தானத்தின் அதிகாரப் பூர்வ இணைய தளம் மூலம் மட்டுமே தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவும் அதன் மூலம் மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு இதுபோன்று போலியாகச் செயல்பட்ட 19 இணைய தளங்களைக் கண்டறிந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் செய்து முடக்கியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.