நீர்நிலை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – விஜயகாந்த் அவசர கோரிக்கை

சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இரண்டு சிறுவர்களும், கிருஷ்ணகிரியில் சிறுமி உட்பட இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தவிர செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் குவாரியில் ஒரு இளைஞர் என நீர் நிலைகளில் உயிரிழப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

முழுவாண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள சிறுவர்கள் கோடைகால வெயிலின் தாக்கத்தால் கிணறு,ஏரி, குவாரி, கம்மாய் போன்ற பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர். அவ்வாறு குளிக்கும்போது ஆழமான பகுதிகளில் இறங்கி நீச்சல் தெரியாமலும், கரைக்கு வர முடியாமலும் தண்ணீரில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அதிர்ச்சியை தருகிறது.

எனவே, அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு போடப்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

விஜயகாந்த் அறிக்கை

திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து வீடுகளில் இருக்கும் மாணவர்கள், கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.

மனதை உளுக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்க செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பான செய்திகளை காணும்போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணமும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.