நடிப்பின் எல்லைகளை உடைத்தெறிந்து தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட தங்கலான் விக்ரமின் பிறந்த தினத்தை முன்னிட்டு… சில தகவல்கள் இதோ!
* எப்பவும் அம்மா செல்லம். அம்மா உயர் அதிகாரியாக இருந்தபோது அதிரடியாக செயல்பட்டு இருப்பதைப் பற்றி எப்பவும் பெருமையாகப் பேசுவார். கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளை ஒற்றை ஆளாக வழிமறித்துப் பிடிப்பதை அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரித்ததை எடுத்துச் சொல்லி பெருமைப்படுவார்.
* துருவ்வும், விக்ரமும் கிட்டத்தட்ட நண்பர்கள் மாதிரிதான். அப்பாவின் கண்டிப்பு அறவே கிடையாது. எந்த கண்டிப்பு என்றாலும் அது அம்மாவிடம் இருந்து தான் குழந்தைகளுக்கு வரும்.
* விக்ரம் என்ற பெயரெல்லாம் சினிமாவோடு மட்டும்தான். நண்பர்கள், பள்ளி, கல்லூரி தோழர்கள் என எல்லா இடங்களிலும் ‘கென்னி’ தான்.
* எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உடற்பயிற்சியை மட்டும் விட்டுத்தர மாட்டார். வீட்டிலேயே தனியாக உடற்பயிற்சிக் கூடமும் வைத்திருக்கிறார். இப்போது அவரோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் பார்ட்னர் வேறு யாரும் அல்ல அவரின் மகன் கதாநாயகன் துருவ்.
* மிகவும் விலை உயர்ந்த பேசும் கிளிகளை அரசின் அனுமதியோடு வளர்க்கிறார் விக்ரம். அவர் அவுட்டோர் ஷூட்டிங் கிளம்பி விட்டால் தினமும் அவரது பெயரைச் சொல்லி அழைக்கும். வந்து விட்டால் அவர் உடல் முழுவதும் ஏறி முத்தமிட்டு ஒரே கொஞ்சல்தான். இதுபோல் ஏழெட்டு கிளிகள் வைத்திருக்கிறார். அதற்கான உணவுகள், பராமரிப்பு முறைகள் எல்லாமே வெளிநாட்டிலிருந்து பெறப்படுகின்றன.
* வீட்டில் எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். இசைக்குயில் என வீட்டில் செல்லமாகக் குறிப்பிடுவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி படப்பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்பார்.
* நெருங்கிய நண்பர்களிடம் ரொம்பவே குதூகலமாக சிரித்துப் பேசுவார். ஆனால் சினிமாவில் சீரியஸ் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் போது செட்டில் மிகவும் அமைதியான விக்ரமை மட்டுமே காண முடியும்.
* இன்னமும் நினைத்தால் லயோலா கல்லூரிக்குப் போய் உட்கார்ந்திருந்த கடைசி பெஞ்சில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோடுகிறார். ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது இந்த விசிட் நடக்கிறது.
* உடைகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார். மும்பையில் இருந்து அவருக்கு ஆடைத் தேர்வு செய்து அனுப்புகிறார்கள். அவர் விழாக்களுக்கு எவ்விதம் உடைய அணிந்து வருகிறார் என்பதை திரையுலகில் நிறைய பேர் கவனிப்பார்கள்.
* வருடத்திற்கு ஒருமுறை மகன், மனைவியோடு வெளிநாடுகளுக்கு ட்ரிப் கண்டிப்பாக உண்டு. திரும்பும் போது நண்பர்களுக்கு பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு வருவார்.