போளூர்: அதிமுக கைவசம் உள்ள சட்டமன்றத் தொகுதி போளூர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ ஆக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பதவி வகித்து வருகிறார்.
ஆளும் கட்சியின் தொகுதியாக இது இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின்துறை சார்ந்து பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது போளூர். ‘மாற்றான் தாய்’ மனப்பான்மை இல்லாமல் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து மகிழ்ந்து போய் உள்ளனர் இத்தொகுதி மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் போளூரில் நெசவுதான் பிரதான தொழில். அதை நம்பியே அதிகமானவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இதற்குச் சரிபங்காக வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட விவசாயிகளும் வாழ்ந்து வருகின்றனர்.
மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாத ஸ்டாலின்: விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவசம் என முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ள திட்டங்களால் போளூர் தொகுதி மக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.
அப்படி என்ன மாற்றங்களை அடைந்துள்ளது போளூர்? சரியான கேள்வி. இந்தக் கொளுத்தும் கோடைக்காலத்திலும் மின்வெட்டே இல்லாத அளவுக்கு மின் விநியோகத்தில் தன்னிறைவைப் பெற்றுள்ளது போளூர்.
அது குறித்து பேசிய உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வரும் ஏ. பக்தவத்சலம், “என்னுடைய கட்டுப்பாட்டில் 4 பகுதிகள் உள்ளன. சுமார் 100 கிராமங்கள் வரைக்கும் என் பகுதியில் உள்ள துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை விநியோகித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் கடந்த ஆட்சிக்காலம் வரை 10 எம் வி ஏ பவர் டிரான்ஸ்ஃபார்மர்கள் இருந்தன. அவை இப்போது 16 எம் வி ஏ பவர் டிரான்ஸ்ஃபார்மர்களாக மாற்றி அமைத்திருக்கிறோம். தலா 1 கோடியே 13 லட்சம் நிதியில் இந்த இரண்டிற்கும் சேர்த்து 2 கோடியே 26 லட்சம் செலவு செய்து மாற்றித் தரப்பட்டுள்ளன.
இங்குள்ள துணைமின் நிலையம் 1996இல் நிறுவப்பட்டது. அதனால், எல்லா பிரேக்கர்களும் பழசாகிப் பழுதடைந்து போய் இருந்தன. அதற்காக இப்போது 4 பிரேக்கர்களை மாற்றி உள்ளோம். ஒரு பிரேக்கருக்கு 11 லட்சம் செலவு வீதம் மொத்தம் 45 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
பழுதான மின் கம்பங்கள் பற்றி புகார்கள் வந்த உடனேயே மாற்றிக் கொடுத்து வருகிறோம். அதுவும் இந்த ‘மின்னகம்’ வந்த பிறகு அவர்களது புகார்கள் மின்னல் வேகத்தில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. ஆகவே வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் திருப்தியாக உள்ளனர்.
அடுத்து பெரணம்பாக்கம் என்ற ஊரில் புதியதாக 63கேவி டிரான்ஸ்ப்ஃபார்மர் அமைத்துக் கொடுத்துள்ளோம். இந்த ஊருக்கும் விவசாயத்திற்கும் சேர்த்து ஒரு டிரான்ஸ்ஃபார்மர் மின் விநியோகம் செய்துவந்தது.
ஏதேனும் பழுது ஏற்பட்டால், ஒட்டுமொத்தமாக ஊருக்கும் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டுத்தான், அதைச் சீர்செய்ய முடியும். அந்த நிலைதான் நீடித்துவந்தது. இதனால், ஊர்மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அதற்காகத்தான் இப்போது புதியதாக ஒரு டிரான்ஸ்ஃபார்மர் போட்டுக் கொடுத்தோம். இதனால் ஊர் மின் விநியோகம் என்பது தனியாகப் பிரிக்கப்பட்டு, தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் இதனைச் செய்து கொடுத்துள்ளோம். இதனால் 500 பேர் பயனடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுக்கால ஆட்சியில் நடந்த மாற்றங்கள்: இவைப் போக விவசாயி மின் இணைப்பு திட்டத்தில் மட்டும் 500 பேருக்கும் புதியதாக மின்சார இணைப்பை வழங்கியுள்ளோம். அதுவும் ஆவணங்கள் கொடுத்தவுடனேயே விரைந்து செயல்பட்டு இணைப்பைக் கொடுத்துள்ளோம். சேத்துப்பட்டில் ஒரே ஒரு ஃபீடர் மட்டும்தான் இருந்தது. அதையும் பிரித்து, நகரம் 1, நகரம் 2 போட்டுக் கொடுத்துள்ளோம்.
இதனால் என்ன இலாபம் என்றால், ஏதேனும் பிரேக்கர் பழுதாகிவிட்டது என்றால் தனித்தனியாக வைத்து பழுதை சரிசெய்யலாம். அதுவரை மற்றொரு பிரேக்கர் வழியாக மின்சாரத்தைத் தடையின்றி வழங்கலாம். ஆகவே மக்கள் பாதிப்படையமாட்டார்கள். இதை மாற்றிய பிறகுதான் தடையற்ற மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.
கடந்த முறை புயல் அடித்தபோது ஏறக்குறைய 40 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து விட்டன. அவை அனைத்தையும் உடனடியாக, எவ்வித தாமதமுமின்றி மாற்றிக் கொடுத்தோம். அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கடி ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் விரைந்து அவரது பார்வைக்குப் புகார்களைக் கொண்டுபோகிறோம். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஹெச்டி மற்றும் எல்டி மின் வழிப்பாதைகளில் மரங்கள் உரசினால் உடனடியாக அதை வெட்ட ஆணையிட்டிருந்தார்.
அதன்படி ஹெச்டி லைன் செல்லும் ஆயிரம் பகுதிகளில் எங்கள் ஊழியர்கள் மரங்களை வெட்டி பாதையை இதுவரை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.
முன்பு எல்லாம் இரவு நேரங்களில் மரம் உரசி மின் பாதைகளில் தடைகள் ஏற்பட்டன. இப்போது அந்தப் பிரச்சினையே இல்லை. இதனால் நாம் புதியதாக மாற்றும் உபகரணங்களின் ஆயுளும் அதிகரித்துள்ளது. அடிக்கடி பொருட்களை மாற்றத் தேவையில்லாததால், மின்துறைக்குப் பொருளாதார இலாபம் ஏற்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கோடைக்காலத்தில்கூட நாங்கள் மின்வெட்டே இல்லாமல் மின் விநியோகம் செய்துவருகிறோம்” என்கிறார்
மகிழ்ச்சி மழையில் போளூர் தொகுதி மக்கள்: தேவிகாபுரம் உபக்கோட்டப் பகுதி உதவி செயற்பொறியாளர் பேசும்போது, “என் பகுதியில் இரண்டு 33கேவி துணைமின் நிலையங்கள் உள்ளன. இதுவரை எங்கள் பகுதிகளில் மட்டும் 70 உடைந்துபோன கம்பங்களை மாற்றி அமைத்துள்ளோம்.
குறைந்த மின் அழுத்தம் பிரச்சினை நிலவிய பகுதிகளில் புதிய மின்மாற்றியை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஒரு மின்மாற்றிக்கு 8 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆக, மொத்தம் 16 மின்மாற்றிகளை புதியதாக அமைத்துள்ளோம்.
அதேபோல மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் சரிந்து விடாமல் இருக்க இழுவைக் கம்பிகள் பல இடங்களில் அமைத்துள்ளோம். இதனால் மின்கம்பிகள் கீழே தொங்காமல் இருக்கும். மின் கடத்தலும் சீராக நடக்கும்.
இவை போக அதிக தொலைவு இடைவெளி உள்ள மின்கம்பங்களைக் குறைப்பதற்காக மட்டும் 90 கம்பங்களை புதியதாக நட்டுள்ளோம்.
ஆத்துறை கிராமத்தில் மொத்தம் 63 டிரான்ஸ்ஃபார்மர்கள் இருந்தன. அவற்றை 100 ஆக உயர்த்திக் கொடுத்துள்ளோம். இதனால் லோ ஓல்ட் பிரச்சினையை இல்லாமல் செய்துள்ளோம். இதைப்போல எங்கள் பகுதியில் 100 கேவியில் ஒரு புதிய டிரான்ஸ்ஃபார்மர் நிறுவியுள்ளோம்.
கோடைக்காலத்தில் ஏற்படும் மின்பற்றாக்குறையைச் சரிசெய்ய 30 லட்சம் செலவில் கெப்பாசிட்டர் பேங்க் ஒன்றையும் நிறுவியுள்ளோம். இதனால், கோடைக்காலத்தில்கூட தங்குதடை இல்லாமல் மின் சேவையை வழங்கமுடிகிறது” என்கிறார்
“முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு நோடல் ஆஃபீசரை புதியதாக அமைத்துள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு என்று தமிழகம் முழுவதும் ஒரு வாட்ஸ் அப் குழு செயல்படுகிறது.
அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார். எங்கு எங்கு என்னப் பிரச்சினை என அமைச்சருக்குத் தகவல் கிடைத்ததும், அவர் குழுவில் போட்டுவிடுவார். அந்தப் பகுதியின் அதிகாரி அதைக் கவனித்து நடவடிக்கை எடுப்பார்.
அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எந்த அளவு பணி முடிந்துள்ளது? எவ்வளவு நாளில் முடிந்தது? முடியவில்லை என்றால் அது ஏன்? என அனைத்தும் அமைச்சர் பார்வைக்குச் சென்றுவிடுகிறது. ஆகவே வேலைகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றன. இது இந்த ஆட்சியில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்” என்கிறார்
இத்தனை மாற்றங்களை ஸ்டாலின் செய்து தந்துள்ளதால், இத்தொகுதி மக்கள் அவரை மனதாரப் புகழ்ந்து பேசிவருகின்றனர்