சென்னை: பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். மேலும், கூட்டணி குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு பக்கம் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளது.
இருப்பினும், திமுக கூட்டணியைப் போல அனைத்து தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி அப்படியே பயணிக்கிறது என்று சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கட்சிகள் தனித்தே களமிறங்கின.
அதிமுக கூட்டணி: இதனிடையே சமீப நாட்களாக அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளில் இருக்கும் தலைவர்கள் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை திமுக தலைவர்கள் சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டார். அத்துடன் நிற்காமல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பே, மற்ற அனைத்து கூட்டணிக் கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று சொன்னார்,
இது அதிமுக- பாஜக கூட்டணிக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினையாற்றினர். ஒரு கட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே, அண்ணாமலை குறித்து தன்னிடம் எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம்.. அதற்குப் பதிலளிக்க முடியாது என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இப்படி இரு தரப்பிற்கும் இடையேயான வார்த்தை மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது.
எடப்பாடி பழனிசாமி: இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இளங்கோவன் படத்தைத் திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ” அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது.
மாநிலத்தில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே ஒறு சாட்சி.. கஞ்சா விற்பனை பற்றி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அதிமுக நிர்வாகியை கொலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்படும் தொண்டர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும். இப்போது இளங்கோவனின் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக பாதுகாப்பு தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களவை தேர்தல்: அதிமுக ஆட்சியில் சட்ட – ஒழுங்கு மிகச் சிறப்பாகவே இருந்தது. அதிமுக காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால், இப்போது பாருங்கள் மக்களுக்குப் பாதுகாப்பே இல்லாத சூழலே இருக்கிறது. மாநிலத்தில் அடியோடு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதேபோல குற்றங்களும் அதிகரித்துவிட்டது. இதெல்லாம் நிச்சயம் 2024 மக்களவை தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கவே செய்யும்.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி ஒன்று அமைக்கப்படும். அந்த கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெல்லும். மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், அதை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவெல்லாம் நிச்சயம் சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கவே செய்யும்.
திருப்புமுனை: நாங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் மிகப் பெரிய மாநாட்டை நடத்த உள்ளோம். இது அதிமுகவுக்குத் திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடாகவே இருக்கும். நிச்சயம் இந்தியாவின் அனைத்து தலைவர்களும் மதுரையை நோக்கிப் பார்க்கும் அளவுக்கு இந்த அதிமுகவின் மாநில மாநாடு மிக சிறப்பாக நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.