புதுடில்லி : ”பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பது தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, அடுத்த ஆண்டுக்குள் அடைவோம்,” என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், ஹர்தீப்சிங் பூரி கூறினார்.
புதுடில்லியில், சி.பி.ஜி., எனப்படும் சுருக்கப்பட்ட உயிர்வாயு பற்றிய உலகளாவிய மாநாடு, இன்று (ஏப்.,17)ம் தேதி துவங்கியது.
நாளை வரை நடைபெறும், இந்த மாநாட்டில் சி.பி.ஜி.,யின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் அதில், மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து, தொழில்துறையினருக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், ஹர்தீப்சிங் பூரி பேசியதாவது:
2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை, 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்த, முடிவு செய்திருந்தோம். பிரதமர் மோடி, 2025ம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய உத்தரவிட்டார்.
எனினும், அடுத்த ஆண்டுக்குள் அந்த இலக்கை, நாங்கள் அடைவோம்.
இந்தாண்டுக்கான உயிரி எரிபொருளுக்கான இலக்கை, ஐந்து மாதங்களுக்கு முன்பே அடைந்துள்ளோம்.
சி.பி.ஜி., எனப்படும் சுருக்கப்பட்ட பயோ காஸ் உற்பத்தியில், மத்திய அரசுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில், பல மாநிலங்கள், சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதை, எதிர்காலத்தில் நீங்கள் காணலாம்.
சி.பி.ஜி., உற்பத்திக்கு தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்கள் இலவசமாக தேவைப்படும். இந்த விவகாரத்தில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் மாநில அரசுகளின் பங்கு மிக முக்கியம்.
சி.பி.ஜி.,யின் தன்மை மற்றும் அதை வழிநடத்தி செல்லும், நடைமுறையை பற்றி, நாடு முழுவதும் கொண்டு பரப்ப வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்