அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார்.
அதிமுக VS பாஜக
தமிழ்நாடு பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. பாஜகவின் உறுப்பினர்கள் அதிமுகவில் சேர்ந்தது முதல் மோதல் தொடங்கியது. அதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜகவினர் கொளுத்த, அண்ணாமலை உருவப்படத்தை அதிமுகவினர் கொளுத்தினர். அதையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அண்ணாமலை எகிற, தமிழகத்தில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என அமித்ஷா கொட்டு வைத்தார்.
இதில் டென்சனான அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்து சசிகலா, பன்னீர் செல்வம், தினகரன் ஆகியோரை இணைத்து வரவுள்ள தேர்தலை சந்திக்க வேண்டும் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கிளப்பி விட்டனர். அதேபோல் ஜெயலலிதாவை போல் நானும் ஒரு தலைவர் என அவர் கூறியதும் அதிமுகவினர் மத்தியல் கோபத்தை ஏற்படுத்தியது.
அவர பத்தி கேட்காதிங்க
இந்த சூழலில் திமுகவினர் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறிவிட்ட சில அமைச்சர்களின் சொத்துபட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதோடு நிறுத்தாமல் தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் அனைத்தின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறினார். இது அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசும்போது, ‘‘ஏன் அவரை பற்றியே பேசிட்டு இருக்கீங்க.. இப்படி பேசி பேசிதான் அவர் பெரிய ஆள் ஆகுறாரு. நான் கிட்டத்தட்ட 50 வருஷமாக அரசியலில் இருக்கிறேன். என்ன நடக்குது ஏது நடக்குதுனு எனக்கு தெரியும்.
டச்.. டர்..
அவரு இப்படி பேட்டி கொடுத்தே பெரிய ஆள் ஆகணும்னு நினைக்கிறாரு. அரசியலில் இருப்பவர்களுக்கு அதன் அடிப்படை தன்மை தெரிய வேண்டும். முதிர்ந்த அரசியல்வாதிகளை பற்றி என்னிடம் கேளுங்க.. நான் பதில் சொல்கிறேன்’’ என நேரடியாக அண்ணாமலையை தாக்கி பேசினார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவர் ஒரு அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவர். எங்களின் அரசியல் வாழ்க்கையை பாருங்கள். 30, 40 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளோம். அண்ணாமலையை கண்டு நாங்கள் ஏன் பயப்பட போகிறோம்? அதிமுகவை பாஜக விமர்சிப்பது, வளர்த்த கடா மார்பில் பாய்வதை போன்றது. கூட்டணியில் இருந்துகொண்டே மாறுபாடாக பேசக்கூடாது. எங்களை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என்று கூறினார்.
பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், ‘‘எங்களை தேவையில்லாம ‘டச்’ பண்ணினா நெருப்போட விளையாடற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே. முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசிச்சுப் பாருங்க’’ என்று கூறியுள்ளார்.