சென்னை: Ponniyn Selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்கு படக்குழு தஞ்சாவூருக்கு செல்லவில்லை என சர்ச்சை எழுந்த சூழலில் அதுகுறித்து இப்போது விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.
மணிரத்னம் தொடக்கம்: பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதற்கான முயற்சியில் எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெறும் என ரசிகர்களும், படக்குழுவினரும் நம்பிக்கையில் இருக்கின்றனர்.. இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன்: படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் பொன்னியின் செல்வன் Anthem வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதற்கிடையே புரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்துவருகிறது பொன்னியின் செல்வன் டீம். ஆனால் தஞ்சாவூருக்கு மட்டும் செல்லவில்லை.
எழுந்த சர்ச்சை: பொன்னியின் செல்வன் முழுக்க முழுக்க சோழர்களை பற்றிய படம். கதைக்களமும் தஞ்சாவூரை அடிப்படையாகக் கொண்டது. நிலைமை இப்படி இருக்கையில் படக்குழு எப்படி தஞ்சாவூருக்கு புரோமோஷனுக்கு செல்லாமல் இருக்கலாம் என பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதுகுறித்து படக்குழு எந்த விளக்கத்தையும் அளிக்காமல் இருந்தது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் 1 ரிலீஸ் ஆனபோது பார்த்திபன் மட்டும் தஞ்சாவூருக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிச்சயம் செல்வோம்: இந்நிலையில் சென்னையில் இன்று பொன்னியின் செல்வன் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது தஞ்சாவூருக்கு செல்லாதது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, “பொன்னியின் செல்வன் 1 படத்தின் ட்ரெய்லரை தஞ்சாவூரில்தான் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அங்கு வெளியிட முடியவில்லை. புரோமோஷனுக்கும் செல்ல முடியவில்லை. பொன்னியின் செல்வன் 2 புரோமோஷனுக்கு நிச்சயம் நாங்கள் தஞ்சாவூருக்கு செல்வோம். அந்தத் திட்டம் எங்களிடம் இருக்கிறது” என்றார்.