தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான புதிய அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முதல்வரும், மாற்றுத் திறனாளிகள் துறை அமைச்சருமான
2023-24ஆம் நிதியாண்டிற்கான அறிவிப்புகளை இன்று (ஏப்ரல் 17) வெளியிட்டார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
அதில், மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வட்டியில்லா கடன்
இந்த வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையை செலுத்த இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட வட்டியில்லா கடனுதவி கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு தரை தளத்திலேயே வீடுகள் ஒதுக்கப்படும். அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை 5 வருட காலத்திற்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
இந்த திட்டத்தில் அதற்கான வட்டி தொகையை கடன் வழங்கும் வங்கிக்கு அரசே செலுத்திவிடும். மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் 1,000 மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 120 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து,
அறிவிப்புகள்
உயர்கல்வி பயிலும் 1,000 பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா 14,000 ரூபாய் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் 140 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு 450 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையை உயர்த்தி கூடுதலாக 200 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
செவி மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சைகை மொழி பெயர்ப்பாளர் பயிற்சி அளிக்க 15 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.மாற்றுத் திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதியுதவி பெறும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க 534.78 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதேபோல் மொத்தம் 14 புதிய அறிவிப்புகள் தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.