புதுடில்லி,இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் எனவும், வடமேற்கு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் கோடைக்காலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில், வெப்பநிலை சராசரி அளவை விட அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
குறிப்பாக, கங்கை நதி பாயும் மேற்குவங்கம், பீஹார் மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சிக்கிம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த மூன்று நாட்கள் வரை வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு உத்தர பிரதேசத்தில் இன்றும், கிழக்கு உத்தர பிரதேசத்தில் அடுத்த இரு நாட்களுக்கும் வெப்ப அலை வீசக்கூடும்.இதற்கிடையே சில பகுதிகளில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.
இதுகுறித்து அம்மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஉள்ளதாவது:
மேற்கு இமயமலை பகுதிகளில், வடக்கில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வடமேற்கு பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, புதுடில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் சில பகுதிகளில் இன்றும், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் நாளையும் கன மழை பெய்யக்கூடும். இதில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement