புதுடெல்லி: டெல்லி அரசு கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. உரிமம் பெற்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், அந்த கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது. எனினும், இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்.26-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், பிஆர்எஸ்கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கும் தொடர்புஇருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது.
144 தடை உத்தரவு: இந்த வழக்கில், ஏப்.16-ம் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 1,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர்குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் 4 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்க வகை செய்யும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை சிபிஐ அலுவலகத்துக்கு புறப்படுவதற்கு முன்பு கேஜ்ரிவால், கட்சியின் உயர்நிலைக் குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பிறகு, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஞ்சய் சிங், ராகவ் சத்தா மற்றும் டெல்லி அமைச்சர்கள் சிலரும் உடன் சென்றனர்.
9 மணி நேரம் விசாரணை: பின்னர், சிபிஐ அதிகாரிகள் முன்பு கேஜ்ரிவால் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கெனவே முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கேஜ்ரிவாலிடம் அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கேஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதை கண்டித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐஅலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற ராகவ் சத்தா, சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பஞ்சாப் மாநில அமைச்சர்கள், தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பஞ்சாபில் இருந்துபுறப்பட்டு வந்த சில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை டெல்லியின் சிங்கு எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். மத்திய அரசை கண்டித்து அங்கேயே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பஞ்சாப் சுகாதாரஅமைச்சர் பல்பீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டின் எந்த பகுதிக்கும் செல்வதற்கான உரிமையை அரசியல் சாசனமும், உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ள நிலையில், டெல்லிக்கு செல்ல முயன்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்’என்று பதிவிட்டுள்ளார்.
அவசர ஆலோசனை: சிபிஐ விசாரணைக்கு பிறகு அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படக்கூடும் என்ற சந்தேகம் இருந்ததால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா, டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், துணை மேயர் ஆலே முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.