ஜோகன்ஸ்பர்க் : நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இந்தப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடுகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். தைவானில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் ரயில் ஆக்ஷன் காட்சிக்காக தென்னாப்பிரிக்காவில் சூட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலகட்டத்தில் நடப்பதாக இந்த காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் கமல்ஹாசனின் சமீபத்திய க்ளிக் : நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஒருபுறம் தன்னுடைய தயாரிப்புப் பணியையும் முடுக்கி விட்டுள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் 4 வருடங்களாக முடங்கியிருந்த இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கையும் கடந்த ஆண்டில் துவக்கி அதன் சூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்றுள்ளார். படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது வெளிநாடுகளில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
தைவானில் 4 நாட்கள் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு கமல்ஹாசன் பங்கேற்கும் அதிரடி ரயில் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் நடைபெறுவதாக இந்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, அந்த காலத்திய நபர்களை குறிக்கும் வகையில் இந்த சூட்டிங்கில் கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக தைவானில் இருக்கும்படியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட கமல்ஹாசன், தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலும் சூட்டிங்கிற்கு முன்னதாக தான் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களையும், இசைக்கருவியை வாசிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் புதிய படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் கேமராவுடன் வெளியில் கிளம்புவதாக காணப்படுகிறது. முன்னதாக இதேபோல ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் சூரிய அஸ்தமனத்திலும் தன்னுடைய தேடலை நோக்கிய பயணத்தில் கையில் கேமராவுடன் புறப்பட்டுள்ளார் கமல்ஹாசன். அவர் புகைப்படங்களை எடுத்துத் தள்ளும் முன்பு, அழகான பின்புலத்தில் அவரை மற்றொருவர் புகைப்படம் எடுத்துள்ளது தற்போது ரசிகர்கள் பார்வைக்கு கிடைத்துள்ளது. அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.