கத்தியுடன் துரத்திய தாய்; வறுமை; தன்னம்பிக்கை; இன்று 620 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபரான டோனி!

`பேரார்வம்தான் மேதையாவதற்கான தொடக்கம்.’ – டோனி ராபின்ஸ்

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அடைக்கலம் தருவது தாய்மடி. தேறுதலையும் ஆறுதலையும் அன்னையைத் தவிர அழுத்தமாக வேறு யாராலும் வழங்க முடியாது. அம்மாவே குழந்தைக்குப் பிரச்னையாக மாறினால்..? கோடியில் ஒருவருக்கு அப்படி நேரலாம். அப்படி வரம் வாங்கி வந்தவர்களில் ஒருவர் டோனி ராபின்ஸ் (Tony Robbins).

1960. கலிஃபோர்னியாவில் இருக்கும் நார்த் ஹாலிவுட்டில் பிறந்தார் டோனி ராபின்ஸ். இயற்பெயர் அந்தோணி ஜே. மஹாவோரிக் (Anthony J. Mahavoric). அம்மா நிக்கி போதைக்கு அடிமையாகியிருந்தார். காலை, மதியம், இரவு என எந்நேரமும் போதையில் திளைத்திருந்தார். அவருடைய தந்தை ஒரு கேரேஜைப் பார்த்துக்கொள்ளும் காவலாளி வேலை பார்த்துவந்தார். அம்மாவின் போதைப் பழக்கம் இல்லற வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. அந்தோணிக்கு 7 வயது நடக்கும்போது அப்பா விவாகரத்து வாங்கிக்கொண்டு விலகிப்போனார்.

வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர்தான் அந்தோணி. ஆனால் வீடு என்பது அந்தக் குழந்தைக்கு நரகமாக இருந்தது. அம்மாவைக் கண்டாலே அலறி நடுங்கினார். அடி, உதை ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அம்மா கொடுக்கும் சித்ரவதைகள் கொடூரமாக இருந்தன. போதையில் அந்தோணியின் தொண்டைக்குள் சோப்புத் தண்ணீரை ஊற்றுவது, உடம்பில் கண்ட இடத்திலும் கீறி வைப்பது எனத் தொடர்ந்தன சித்ரவதைகள்.

டோனி ராபின்ஸ்

ஒரு நாள் அந்தோணியின் தலையை சுவரில் மோதி மோதி ரத்தம் வரவைத்துவிட்டார் அம்மா. ஆனால், அதையெல்லாம் எதிர்காலத்தில் பாசிட்டிவான அம்சங்களாக எடுத்துக்கொண்டது அந்தக் குழந்தை. பின்னாளில் ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார் டோனி ராபின்ஸ்…

`நான் மனதில் விரும்பிய மாதிரி எனக்கு என் அம்மா இருந்திருந்தால், நான் பசியோடு அலைந்திருக்க மாட்டேன்; வலிகளை அனுபவித்திருக்க மாட்டேன்; எனக்கு மற்றவர்களின் வலியும் வேதனையும்கூட தெரியாமலேயேகூடப் போயிருக்கும். ஆனால் எனக்கு வாய்த்த அம்மா எனக்கு அளித்தவை மற்றவர்களைப் புரிந்துகொள்ள உதவும் பாடங்கள். அவர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எனக்கு உதவுபவை…’

அந்தோணியின் தந்தை விலகிச் சென்ற பிறகு அம்மா நிக்கி திருமணம் செய்துகொள்வதும், பிறகு அது விவாகரத்தாவதும் தொடர்ந்துகொண்டேயிருந்தன. இடையில் கணவராக வாய்த்தவர் ஜிம் ராபின்ஸ். பேஸ்பால் விளையாட்டு வீரர். அவர்தான் அந்தோணியைச் சட்டபூர்வமாக மகனாக ஏற்றுக்கொண்டார். அப்போது அந்தோணிக்கு வயது 12. அவர் பெயரும் `டோனி ராபின்ஸ்’ என மாறியது.

அம்மாவின் கணவர்கள் மாறினாலும், துன்பங்கள் மாறவில்லை. வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மூத்தவர் என்பதால், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கவேண்டிய அவலமெல்லாம் நடந்தது. பொறுத்துக்கொண்டார்.

டோனி ராபின்ஸ்

அன்று மிக முக்கிய தினம். ஆங்கிலத்தில் `Thanksgiving Day’ என்பார்கள். `நன்றி அறிவிப்பு தினம்.’ அன்றைக்குப் பார்த்து வீட்டில் சாப்பிட ஒரு ரொட்டித்துண்டுகூட இல்லை. டோனியின் தம்பியும் தங்கையும் பசியில் கதறுவதை அவரால் தாங்க முடியவில்லை. இவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், அம்மாவும் அவருடைய புதிய கணவரும் ஓர் அறைக்குள் சத்தம்போட்டுச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது. அம்மாவோ, அவரோ கதவு தட்டும் சத்தத்தைக் காது கொடுத்துக் கேட்கக்கூட தயாராக இல்லை. அடுத்து அந்த வீட்டுக்கு மூத்தவர் டோனி ராபின்ஸ்தானே… எழுந்தார். கதவைத் திறந்தார். வெளியே ஆஜானுபாகுவான ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் பெரிய பெட்டி. அது நிறைய விதவிதமான உணவுகள். அந்த மனிதர் டோனியின் கைகளைப் பிடித்து இறுக்கமாகக் குலுக்கினார். அன்றைக்கு `தேங்க்ஸ்கிவிங் டே’ என்பதை நினைவுபடுத்தினார். பெட்டியை நீட்டினார். எடை அதிகமாக இருந்த அந்தப் பெட்டியை வாங்கும்போதே டோனிக்குக் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

`என் குடும்பத்துக்கு உதவி கிடைத்ததைப்போல, பிற்காலத்தில் பலருக்கும் நான் உதவி செய்வேன் என்று அன்றைக்கு நான் சபதமெடுத்துக்கொண்டேன்.’ – டோனி ராபின்ஸ்.

கற்றுக்கொள்வதில் பேரார்வம்கொண்டவர் டோனி ராபின்ஸ். அந்தப் பதின்பருவத்திலேயே பல புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தார். சைக்காலஜி தொடங்கி தத்துவம் வரை அவரின் தேடல் நீண்டது. வாசிப்பு அவருக்குப் பல வாசல்களைத் திறந்து காட்டியது. ஆனால், பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடியவில்லை. அதற்கும் காரணமாக இருந்தது அவருடைய அம்மாதான்.

அது ஒரு கிறிஸ்துமஸ் தினம். ஏதோ ஒரு பிரச்னை. அம்மாவுக்கு யார்மீதோ, எதன்மீதோ கோபம். அது டோனியின் மேல் திரும்பியது. சத்தம் போட்டுத் திட்டியபடி டோனியை விரட்ட ஆரம்பித்தார் அம்மா. அவர் கையில் ஒரு கத்தி வேறு. பயந்துபோனார் டோனி. வீட்டைவிட்டு வெளியே ஓடினார். அப்போதும் அம்மா விடவில்லை. கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினார். அன்றைக்கு வீட்டைவிட்டு ஓடிய டோனி ராபின்ஸ், பிறகு வீடு திரும்பவில்லை.

`ஒவ்வொரு பிரச்னையும் ஒரு வெகுமதி. பிரச்னைகள் இல்லாமல் நம்மால் வளர முடியாது.’ – டோனி ராபின்ஸ்.

உலகில் உதவுவதற்கென்றே சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நல்லவரின் உதவியால், டோனி தங்குவதற்கு ஓர் இடம் கிடைத்தது. வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டாலும் வீட்டுக்கு அவரின் உதவி தேவைப்படத்தான் செய்தது. அதற்காகப் பல வேலைகளைப் பார்த்தார். கட்டடக் காவலாளியாக இருந்தார்; சின்னச் சின்ன எலெக்ட்ரிக்கல், குழாய் ரிப்பேர் பார்க்கும் வேலைகளைச் செய்தார்; சுமை தூக்கும் வேலைகளைச் செய்தார்.

டோனி ராபின்ஸ்.

ஒருநாள் தன் பழைய நண்பரைச் சந்தித்தார் டோனி. அந்த நண்பர் அவரைப்போலவே கஷ்டத்தில் உழன்றவர். வறுமையின் பிடியில் சிக்கியிருந்தவர். இப்போது பார்க்கும்போது நல்ல நிலையில் இருந்தார். எப்படி? இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டுவிட்டார்.

“அது ஒண்ணுமில்லை டோனி. ஜிம் ரான் (Jim Rohn) அப்பிடின்னு ஒருத்தர். நீகூட கேள்விப்பட்டிருப்பே. எழுத்தாளர், சிறந்த பேச்சாளர். அவர் ஒரு கூட்டத்துல பேசிக்கிட்டு இருந்தார். அவர் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்குள்ள ஒரு உத்வேகம் வந்துடுச்சு. நாம ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்னு தோண ஆரம்பிச்சுது. நம்மாலயும் முடியும். நாமளும் உயர முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. பழசையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு உழைக்க ஆரம்பிச்சேன். எனக்குள்ள என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிச்சேன். மேல வந்துட்டேன்.’’

ஒரு பேச்சு, ஓர் உரை ஒருவரின் வாழ்க்கையையே மாற்ற முடியுமா என ஆச்சர்யமாக இருந்தது டோனிக்கு. முதல் வேலையாக, தன்னைப் பற்றி விரிவாக, ஜிம் ரானுக்கு ஒரு கடிதம் எழுதினார். `ஐயா உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். என்னைச் சேர்த்துக்கொள்வீர்களா?’ என்று அந்தக் கடிதத்தில் கேட்டிருந்தார். ஜிம் ரானிடமிருந்து பதில் வந்தது. `உடனே கிளம்பி வா.’

`நாம் எதிர்கொள்ளும் மோசமான சவால்கள், மோசமான பிரச்னைகள், மோசமான தோல்விகள்… நாம் வீழ்ந்து போக வேண்டும் என்பதற்காக வருபவை அல்ல. அவை நமக்குள் ஓர் உள்ளொளியை ஏற்படுத்தவும், நம்மை நாமே அறிந்துகொள்ளவும் உதவுபவை.’ – டோனி ராபின்ஸ்.

ஜிம் ரானின் அரவணைப்பு டோனிக்கு இதமாக இருந்தது. அவரிடமிருந்து பலவற்றையும் கற்றுக்கொண்டார். ஒருகட்டத்தில் ஜிம் ரானுக்கு மேடையில் பேசுவதற்கான குறிப்புகள் எழுதித்தரும் அளவுக்கு உயர்ந்தார். இரண்டே வருடங்கள். அவர் எழுதிய `Unlimited Power’ என்ற புத்தகம் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. அவர் எழுதிய புத்தகங்களெல்லாம் `பெஸ்ட் செல்லர்’ என்கிற அடையாளத்தைப் பெற்றன.

இன்றைக்கு அவர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர். அவருக்குச் சொந்தமாக 33 நிறுவனங்கள் இருக்கின்றன. வருடத்துக்கு 2 லட்சம் பேருக்கு அவர்களின் பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குகிறார். செரினா வில்லியம்ஸ், லியனார்டோ டிகாப்ரியோ போன்ற பிரபலங்களுக்கெல்லாம் ஆலோசனையும் பயிற்சியும் வழங்கியிருக்கிறார். இன்றைக்கு டோனி ராபின்ஸின் சொத்து மதிப்பு சுமார் 620 மில்லியன் டாலர். சின்ன வயதில் தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டதுபோலவே `அந்தோணி ராபின்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். உலகின் 56 நாடுகளில் 50 மில்லியன் பேருக்கு உதவி வழங்கியிருக்கிறது அவர் தொண்டு நிறுவனம்.

டோனி ராபின்ஸ்

டோனி ராபின்ஸ் வளர்ந்ததற்கு அடிப்படையாக இருந்தது அவருக்குள் துளிர்விட்டிருந்த பேரார்வம். படிப்பது, கற்றுக்கொள்வது, தன்னை ஒவ்வொரு நாளும் மெருகேற்றிக்கொள்வது என்று அவருக்குள் இருந்த உத்வேகம் அவரை உயர்த்தியிருக்கிறது; உயர்த்திக்கொண்டே இருக்கிறது. `பேரார்வத்துடன் வாழுங்கள்’ என்பது டோனி ராபின்ஸின் பிரபலமான வாசகம்!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த, உத்வேகப்படுத்திய நபர் அல்லது புத்தகம், திரைப்படம் குறித்து கமென்ட்டில் பதிவிடுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.