மகனின் ஆட்டத்தை நேரில் பார்த்தது புதுமையான அனுபவம் – சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சி

மும்பை,

கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஒரு வழியாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகிவிட்டார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடியெடுத்து வைத்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் 2 ஓவர்கள் பந்து வீசினார். விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 23 வயதான அர்ஜூன் ஐ.பி.எல். இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல்-ல் எனது முதல் போட்டி மிகச்சிறந்த தருணமாகும். 2008-ம் ஆண்டு முதல் ஆதரவளித்து வரும் மும்பை இந்தியஸ் அணிக்காக ஆடுவது சிறப்பு வாய்ந்த ஒன்று. அறிமுக வீரருக்குரிய தொப்பியை மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து பெற்றது இனிமையான விஷயம்’ என்றார்.

சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், ‘அர்ஜூன் விளையாடும் ஆட்டங்களை நான் நேரில் சென்று பார்ப்பது கிடையாது. ஏனெனில் அவர் நெருக்கடியின்றி சுதந்திரமாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். அவர் என்ன நினைக்கிறாரோ அதை செய்ய வேண்டும் என்று விரும்புவேன். இப்போது அவரது ஆட்டத்தை நேரில் பார்த்த போது புதுமையான அனுபவமாக இருந்தது.

வீரர்களுடன் பவுண்டரிக்கு வெளியில் அமர்ந்திருக்கும் போது அவரது கவனம், திட்டமிடல் சிதறுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதாலேயே, மறைவாக ரசிக்கும் வகையில் வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து இருந்தேன். மெகா திரையில் என்னை காண்பித்தபோது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் உணரத் தொடங்கியதும் உடனே அறைக்குள் சென்று விட்டேன்’ என்று குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.