பாக்.,கில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக பேசிய சீனர் கைது | Chinese arrested for speaking against Islam in Pak

பெஷாவர் : பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக அவதுாறு பரப்பியதால் துாக்கு தண்டனை விதிக்கப்படும் மத நிந்தனை சட்டத்தின் கீழ் சீனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பெரும்பான்மையான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நடக்கும் அரசின் பல்வேறு திட்டப் பணிகளில் சீனர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த டியான் என்பவரை மத நிந்தனை சட்டத்தின் கீழ் பாக். போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துண்கவா மாகாணத்தில் உள்ள கோமேளா நகரில் தாசு அணைக்கட்டு திட்டப் பணியில் பங்கேற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மதத்துக்கு எதிராகவும் முஹம்மது நபி குறித்து அவதுாறு பரப்பியவருமான டியானை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலிலும் இவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் டியானை கைது செய்தனர்.

மத நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள டியான் இங்குள்ள தாசு அணைக்கட்டு திட்டத்தில் கனரக வாகன இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்தார் என போலீசார் தெரிவித்தனர்.

இங்கு அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கப்படும் மத நிந்தனை சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் கைது செய்யப்படுவது வழக்கம் என்றாலும் கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டினர் அரிதாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.