வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘ஜாதி வாரி நடத்தப்பட்ட கணக்கெடுப்பு விபரங்களை வெளியிட வேண்டும், ௫௦ சதவீத இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்’ என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2011ல் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடவும், அதனடிப்படையில் ஜாதிகளுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும், பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது. அதன் முன்னாள் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பின்தங்கியுள்ள மக்களுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் வேண்டும். வெற்று வாக்குறுதிகள் போதாது. கடந்த, ௨௦௧௧ல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு விபரங்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும்.
ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் எத்தனை சதவீதம் உள்ளனர் என்ற விபரங்களை அவர் தெரிவிக்க வேண்டும். தலித்துகள், பழங்குடியினருக்கு அவர்களுடைய மக்கள்தொகை சதவீதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதற்காக, இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பான, ௫௦ சதவீதம் என்பதை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை புதுப்பிக்க வேண்டும். இதற்காக புதிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இது தொடர்பாக எங்கள் கட்சியின் சார்பில் பார்லிமென்டில் பலமுறை குரல் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement