தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு படிப்படியாக கோடை விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வெப்பத்தில் இருந்து தப்பித்து சற்று ஆறுதல் ஏற்படுத்தி கொள்ளும் ஒரே விஷயம் குளிர் பிரதேசங்களை நோக்கி பயணிப்பது தான். இல்லையெனில் சொந்த கிராமங்களுக்கு திரும்பி இயற்கையின் நிழலில் சற்றே இளைப்பாரலாம்.
கோடை விடுமுறை
இதற்கிடையில் வெளியூர் பயணங்களுக்கு பேருந்துகளை நாடுவோர் தான் அதிகம். வெயிலை சமாளிக்க ஏசி பேருந்துகளில் பயணிக்க பலரும் விரும்புகின்றனர். அப்போது தான் கொஞ்சமாவது தாக்குப் பிடிக்க முடியும் எனக் கூறுகின்றனர். தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து கோவை, மதுரை, பெங்களூரு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு SETC ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
SETC ஏசி பேருந்து சேவை
இந்த சேவை 2019ஆம் ஆண்டு கட்டுப்படியாகக் கூடிய விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் வார நாட்களில் 10 முதல் 25 சதவீதம் வரை டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் கூடுதல் பயணிகளை கவரலாம் என்பது அரசின் திட்டம். வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இப்படியான சலுகைகள் கிடையாது. ஒரு கிலோமீட்டருக்கு 2 ரூபாய் என ஏசி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு
இந்நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ஏசி பேருந்துகளை நாடும் பயணிகள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். இதை கருத்தில் கொண்டு வார நாட்களில் இருந்த சலுகையை வரும் ஜூன் 15ஆம் தேதி நிறுத்தி வைக்க SETC நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு வார நாட்களில் ஏசி பேருந்துகளில் 635 ரூபாய்க்கு பதிலாக 705 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும்.
நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம்
இந்த ஏற்பாடு தொடர் நஷ்டத்தை சந்தித்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தவறான முன்னுதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆம்னி பேருந்துகள் கொள்ளை காசை டிக்கெட் கட்டணமாக வசூலித்து வருகின்றன. இப்படி ஒரு நிலையில் அரசே கட்டணத்தை உயர்த்தினால், தாங்களும் உயர்த்தினால் என்னவென்று அதிரடி நடவடிக்கையில் இறங்கலாம்.
பயணிகள் அவதி
கடைசியில் பயணிகளின் தலையில் சுமையாக வந்து விழும். இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. கட்டணம் கூடுதலாக கொடுத்தாலும் பேருந்து சேவை சொகுசாக இருக்கிறதா? என்றால் இல்லை என்ற குரலை கேட்க முடிகிறது. ஏசி சரியாக வேலை செய்வதில்லை. காற்றோட்டம் இருப்பதில்லை. முகத்தில் நேரடியாக குளிர்ந்த காற்று அடிக்கிறது என பயணிகள் புகார்களை லிஸ்ட் போட்டு வைத்துள்ளனர்.
தயாராக தொழில்நுட்ப குழு
எனவே தரமான சேவையை முதலில் வழங்குங்கள். அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்தால் நிச்சயம் வரவேற்போம் என்கின்றனர் பேருந்து பயணிகள். இதுதொடர்பாக SETC அதிகாரிகள் கூறுகையில், ஏசி பேருந்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 குழுக்களை தயாராக வைத்துள்ளோம் என்றனர்.