இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்கு தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.
அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.இந்த ராக்கெட்டில், சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
இதனை தொடர்ந்து டெலியோஸ்-2 செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டில் பொறுத்தப்பட்டு வருகிற 22-ம் தேதி (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெலியோஸ்-2 செயற்கைகோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. புதிய அணுகுமுறையானது, விண்வெளி நிறுவனம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.