புதுடில்லி :ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரும் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில் புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.
ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட அங்கீகாரம் கோரும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்பதை எதிர்த்தும், அவற்றை நிராகரிக்கக் கோரியும், இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை, முக்கிய வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என்பதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோருவது உரிமையாகாது. திருமணம் என்பது மிகவும் புனிதமானது.
ஹிந்து, இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைவதை தான் திருமணம் என்கின்றன.
நம்முடைய பாரம்பரியம், கலாசாரம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவையும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைவதை தான் திருமணம் என்கின்றன.
இந்த இயற்கை நீதி, நியதிக்கு எதிராக, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அங்கீகரிக்கக் கூடாது.
ஒருவேளை இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது குறித்து உரிய சட்டம் இயற்றும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்