`Chiranjeevi, Dhanush தான் என்னை பார்த்துக்கிட்டாங்க; நினைச்சவங்க உதவல' மனம் திறக்கும் பொன்னம்பலம்

`ஆண்டவன் எனக்கு எல்லாம் கொடுத்தான்.. நீ யாரு உன்னை சுற்றி என்ன நடக்குது? நீ யாரை நம்பணும்? யாரை நம்பக் கூடாது? நல்லது, கெட்டது எல்லாத்தையும் எனக்கு கத்துக் கொடுத்துட்டான். எல்லாருக்கும் நாம வாழ்க்கையில் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்னு சில இருக்கும். அப்படி இந்த காலகட்டத்தில் பல விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன்.

ஒரு படம் எடுத்து அதனால நிறைய நஷ்டமாச்சு. நம்ம மேனேஜர் படம் எடுக்கும்போது காட்டுற உற்சாகத்தை படம் முடிஞ்ச பிறகும் காட்ட மாட்டாங்க. படத்தை வித்துக் கொடுக்க ஆர்வம் காட்டாம படம் முடிஞ்சதும் எங்க வேலை முடிஞ்சதுன்னு அடுத்தப் படத்துக்கு ஓடிடுவாங்க. நமக்கு அந்த பிசினஸெல்லாம் தெரியல. என்னால நான் எடுத்திருந்த படத்தை விற்க முடியாம அதுல கடனாகி மூணு வீடு விற்க வேண்டியதாகிடுச்சு. இதெல்லாம் நமக்கு செட்டாகாது நமக்கு இந்த வியாபாரமே வேண்டாம்னு அந்தப் படத்தை விற்கிற முயற்சியையும் விட்டுட்டேன்.

பொன்னம்பலம்

சினிமாவுல இருந்துகிட்டு சினிமா பற்றிப் புரிஞ்சிக்கவே ரொம்ப வருஷமாச்சு. என் வாழ்க்கை முழுக்கவும் உழைக்கிறது, சம்பாதிக்கிறது, சொந்த பந்தங்களுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்கிறது, அவங்களைப் படிக்க வைக்கிறதுன்னே போயிடுச்சு. `நீ வாழ்க்கையில் ரொம்ப ஆடிட்ட.. உனக்கு ஒரு தண்டனை கொடுக்கிறேன்! அந்த தண்டனைல நீ திருந்திக்க!’னு ஆண்டவன் கொடுத்த இந்த வாய்ப்பு எனக்கு பரிபூர்ணமா உதவுச்சு!” என்றவர் தொடர்ந்து பேசினார். “சாவுற கண்டிஷன்ல இருக்கும்போது நல்லா பழகினவங்க எல்லாம் ஃபோன் பண்ணி நலம் விசாரிக்கலைன்னு வருத்தப்பட்டேன்.

அஜித் சார் என்கிட்ட பேசலைன்னு சொல்லும்போது எல்லாரும் என் மேல கோவப்பட்டாங்க. என் டிரைவரும் நண்பருமான அப்துல் ரசாக் அவருடைய பையனுக்கு இதயத்துல ஓட்டை இருந்ததால மருத்துவ உதவி தேவைன்னு என்கிட்ட சொல்லியிருந்தார். அவர் பையனுடைய ஆப்ரேஷனுக்கு மணிவண்ணன் சார், குஷ்பூ மேடம் எல்லாம் உதவினாங்க. எல்லாரும் உதவின பிறகு மீதம் 52 ஆயிரமோ, 58 ஆயிரமோ தேவைப்பட்டது.

பொன்னம்பலம்

அன்னைக்கு காலையில் இதே அப்துல் ரசாக்கை கூட்டிட்டுப் போய் செட்ல அஜித்கிட்ட விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். மதியம் இன்னொரு முறை இது தொடர்பா அவர்கிட்ட ஞாபகப்படுத்தலாம்னு சொல்லப் போனப்ப அப்பவே பணம் கட்டியாச்சேன்னு பதில் சொன்னார். மருத்துவமனைக்கு நேரடியா அவருடைய மனைவி போய் பணம் கட்டியிருக்காங்க. உதவி பண்ணுற குணம் அஜித்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால தான் அவரை என் தம்பின்னு சொல்றேன். இந்த நிகழ்வு குறித்து முன்னாடியே பத்திரிக்கைகளிலெல்லாம் சொல்லியிருக்கேன். எப்ப நானும், அஜித்தும் சேர்ந்து படம் பண்ணாலும் என்னைப் பார்த்ததும் அக்கறையா என் அம்மாவைப் பற்றி விசாரிப்பார். என் குடும்பத்தில் ஒருவராகத்தான் அவரை இன்னைக்கு வரைக்கும் நினைக்கிறேன்.. இனியும் நினைப்பேன்.

பலரும் அவர்கிட்ட நான் பண உதவி கேட்டதா சொன்னாங்க. நான் அவர் என்னை நலம் விசாரிக்கணும்னு தான் எதிர்பார்த்தேனே தவிர அவர்கிட்ட இருந்து பணமெல்லாம் எதிர்பார்க்கல. அவர் என்னை விசாரிக்காததும் அவருடைய சூழலாக இருக்கலாம்.. அத நான் குறை சொல்லல. என் ஆதங்கத்தை தான் பகிர்ந்துகிட்டேன்.அதே மாதிரி குடிச்சதால தான் எனக்கு இப்படியாச்சுன்னுலாம் மீடியாவுல போட்டுட்டு இருக்காங்க. ஒரு நபர் நான் செட்டிலேயே குடிப்பேன்னுலாம் உட்கார்ந்து பேசியிருக்காரு. பொன்னம்பலம் என்கிற கேரக்டர் இவ்ளோ வளர்ந்திருக்காருன்னா பெரிய பெரிய டைரக்டர், பெரிய பெரிய நடிகர்கள் கூட இருக்கிற செட்ல யாராவது குடிப்பாங்களா? இதுவரைக்கும் யாராவது செட்ல பொன்னம்பலம் குடிக்கிறாருன்னு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்களா? தொழிலில் நான் சுத்தமா இருந்ததால தான் இன்னைக்கு இவ்ளோ நல்லா இருக்கேன்.

பொன்னம்பலம்

ஒருவர் 50 லட்ச ரூபாய் செலவு பண்ணி என் கிட்னியை சரி பண்றார்.. நான் செட்ல இந்த மாதிரி நடந்துகிட்டிருந்தா எனக்கு உதவி பண்ணுவாங்களா? என்னைப் பற்றி தெரிஞ்சவங்க, என் குடும்பத்தைப் பற்றி தெரிஞ்சவங்க தான் எனக்கு உதவினாங்க. நிறைய பேர் பண்ணின உதவியால தான் நான் இன்னைக்கு இருக்கேன். நான் சம்பாதிச்சதுல 75% வீட்டுக்குத்தான் செலவு பண்ணினேன். நான் இப்ப தனியா இருக்கேன். ஏன்னா, இன்பெக்‌ஷன் ஆச்சுன்னா ஆன்டிபயாடிக் கொடுக்கக் கூடாது. கூட்டம் நிறைய இருக்கிற இடத்துக்குப் போகக் கூடாது. மருத்துவர் கொடுத்த அறிவுரையின்படி தனியா இருக்கேன். ஃபேமிலியெல்லாம் வேற ஒரு இடத்துல இருக்காங்க!” என்றவரிடம் மருத்துவமனை நாட்கள் குறித்துக் கேட்டோம். “சினிமாவுல ஒரு காலத்துல எப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்தோம். நாம திடீர்னு விட்டுட்டுப் போயிட்டா குடும்பத்தோட நிலைமை என்ன ஆகும்?னுலாம் மருத்துவமனை மரணப்படுக்கையில் தோணுச்சு. ஆண்டவன் புது வாழ்க்கையை இன்னைக்கு எனக்குக் கொடுத்திருக்கான்.

என் மேல என் ரசிகர்கள் ரொம்பப் பாசமா இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். யாரை நம்புனேனோ அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணல. என் ஃப்ரெண்ட்ஸ், என் கூடப் படிச்சவங்ககிட்ட தான் முதலில் உதவி கேட்டேன். ஆனா, அவங்க யாரும் எனக்கு ஹெல்ப் பண்ணல. என் கூட நடிச்ச நடிகர்கள் தான் உதவி பண்ணினாங்க. சரத்குமார் சார் கூட நடிக்கும்போதெல்லாம் எனக்கும், அவருக்கும் பல நேரங்களில் மோதல் ஆகியிருக்கு.ஆக்‌ஷன் சீக்வென்ஸ் எல்லாம் நான் ரொம்ப ஸ்ட்ரிக்டாக பண்ணுவேன். அதனால அதெல்லாம் அவர் மைண்ட்ல இருக்குமோன்னு தான் யோசிச்சேன். `நீ யோசிக்கிறதெல்லாம் இல்ல பொன்னம்பலம்!’னு ஆண்டவன் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு காட்டிட்டான். சரத்குமார் தான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஃபோன் பண்ணி நலம் விசாரிச்சிட்டு இருக்கார்.. அவர் எனக்குப் பண உதவியும் பண்ணினார்.

பொன்னம்பலம்

அர்ஜூன் சாரும் எப்படி இருக்கீங்கன்னு கேட்டு உடனே ஒரு லட்ச ரூபாய் போட்டு விட்டார். ஜெயம் ரவி, கே எஸ் ரவிக்குமார் எல்லாம் உதவினாங்க. வரிசையா ஒவ்வொருத்தரா உதவி பண்ணினாங்க. நான் யார்கிட்டேயும் பணம் கொடுங்கன்னு கேட்கல.. அவங்களே உதவினாங்க. சரத்குமார் சாரே சில நடிகர்களுக்கு என் நிலையை எடுத்துக் கூறி உதவி பண்ணச் சொல்லியிருக்கார். அவர் சொல்லி பலர் எனக்கு உதவினாங்க!” என்றவரிடம் சிரஞ்சீவி உதவியது குறித்துக் கேட்டோம்.”திடீர்னு ஒரு நாள் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போனேன். அங்க தான் எனக்கு சிரஞ்சீவியோட ஞாபகம் வந்துச்சு. அவர் நம்ம நண்பர் ஆச்சே… அவர்கிட்ட உதவி கேட்கலாம்னு அவருக்கு ஒரே ஒரு ஃபோன் தான் பண்ணினேன். கடவுள் ரூபத்துல ஆஞ்சநேயரே நேரடியா வந்து உதவுற மாதிரி இதுவரைக்கும் 50 லட்சத்துக்கும் மேல செலவாகிடுச்சு.

பொன்னம்பலம்

அவர் தான் என்னோட மருத்துவ செலவை கவனிச்சிக்கிறார். கடவுள் மனிதன் ரூபத்துல வந்து உதவுவாங்கன்னு சொல்லுவாங்க. அப்படியாகத்தான் நான் அவரைப் பார்க்கிறேன் என்றவரிடம் கேப்டன் விஜயகாந்த் குறித்துக் கேட்டோம். “அவர் எனக்கெல்லாம் அவ்வளவு உதவிகள் செய்திருக்கார். என்னை சினிமாவில் உயர்த்தியதற்கு முக்கியக் காரணம் அவர்தான்! சினிமாவில் என் குருன்னு தான் அவரைச் சொல்லணும் என்றவர் தொடர்ந்து பேசினார். எனக்காக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பிரச்னையை தீர்த்து வைக்க உதவுறாங்க. தனுஷ் சார் தான் மூணு வருஷமா என் குடும்பச் செலவை கவனிச்சிக்கிறார்.

இத்தனை பேர் இருக்காங்க அவங்களுக்காகவாவது சந்தோஷமா இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்ததன் காரணம் குறித்துக் கேட்டோம். “ரொம்ப நாளாவே அண்ணாமலை சாரை சந்திக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அவர் என்னை வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்னு சொல்லியிருந்தார். ஆனா, வரவேயில்ல. அதனால நாமளே போய் சந்திக்கலாம்னு சொல்லி அவர் சென்னை வந்தது தெரிந்து அவர்கிட்ட சொல்லாமலேயே போய் சந்திச்சேன். பலரும் அரசியல் ரீதியா சந்திச்சேனான்னு கேட்குறாங்க. நட்பின் அடிப்படையில் தான் அந்த சந்திப்பு இருந்துச்சு. விரைவிலேயே குணமாகி அரசியலிலும், நடிப்பிலும் என் பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன்!” என்றார்.

பொன்னம்பலத்தின் முழுப் பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.