இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கிடையிலான 2023ஆம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நேற்று (ஏப்ரல் 17) தொடங்கி வைத்தார்
இரண்டு நாள் போட்டிகள்!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கிடையிலான 2023ஆம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய இரண்டு தினங்கள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் பங்கேற்பு!
இவ்விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார். இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் துறை அமைச்சர், பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்கள்
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மு.தயாநிதி மாறன், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
உடல் வலிமை, மனத் திறன் – மேம்படுத்த நடவடிக்கை!
தமிழ் நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களின் திறன் மேம்பாட்டினை வளர்த்திட, தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு, தொழில் 4.0 தரத்தில் அதிநவீன தொழிற் பிரிவுகள் தொடங்கி பயிற்சியளிக்கப்பட்டு, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கூடுதலாக, பயிற்சியாளர்களின் உடல்வலிமை மற்றும் மனத்திறனை மேம்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தொழிற் பயிற்சி நிலைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதத்திலும், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி – பிப்ரவரி மாதங்களிலும் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, இதுவரை தொழிற் பயிற்சி நிலைய வரலாற்றில் இல்லாத வகையில், உலகத்தரத்திலான விளையாட்டு அரங்கமான ஜவஹர்லால் நேரு அரங்கத்தில், சிறப்பான ஏற்பாட்டுடன், தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு நடைபெற்று வரும், மாநில விளையாட்டுப் போட்டிகளை நேற்று காலை 10.00 மணியளவில், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்ன் துவக்கி வைத்து சிறப்பு விழா பேருரை ஆற்றினார்.
இன்று பரிசுகள் வழங்கப்படும்!
இந்த இரண்டு நாள் போட்டிகளில், 471 ஆண் பயிற்சியாளர்களும், 246 பெண் பயிற்சியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுக்கென தனித்தனியாக பூப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி, வளையப்பந்து, சதுரங்கம், சுண்டாட்டம் – ஒற்றையர், இறகுப்பந்து – ஒற்றையர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் , 4*100 மீட்டர் தொடர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சிலம்பம், கராத்தே ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் வெற்றி பெறும் பயிற்சியாளர்களுக்கு இரண்டாம் நாள் போட்டிகள் முடிவுற்ற உடன், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன.