ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஜீர்கள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை, இரியபுரம், கும்டாபுரம், மகாராஜன்புரம், மல்குத்திபுரம், சிக்கள்ளி, ஜோரைக்காடு, திகினாரை, கரளவாடி, தமிழ்புரம், தர்மாபுரம், எரகனள்ளி, கல்மண்டிபுரம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை உண்டு சேதப்படுத்தி வந்தது. `கருப்பன்’ என வனத் துறையினர் அந்த யானைக்கு பெயரிடப்பட்டு, அதைக் கண்காணித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருப்பன் யானை தாக்கியதில் தர்மாபுரத்தைச் சேர்ந்த மல்லப்பா, ஜோரைக்காட்டைச் சேர்ந்த மாதேவா ஆகிய இரு விவசாயிகள் உயிரிழந்தனர். எனவே, கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, கருப்பன் யானையை பிடிக்க கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் இரியபுரம் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டன. இரண்டு கும்கி யானைகளும் சேர்ந்து கருப்பன் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டின.
சில நாள்கள் கழித்து மீண்டும் விவசாயத் தோட்டத்துக்குள் கருப்பன் யானை புகுந்ததால், கோழிகமுத்தி முகாமில் இருந்து அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகள் ஜோரைக்காடு பகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்டன. கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். பலமுறை மயக்க ஊசி செலுத்த முயற்சித்தும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை. இதனால், கும்கி யானைகள் மீண்டும் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதேவேளையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து கருப்பன் யானை, பயிர்களை உண்பதும், சேதப்படுத்துவதும் தொடர்கதையானது. இதனால், கருப்பன் யானையை பிடித்தே தீர வேண்டும் எனக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு முகாமில் இருந்து பொம்மன், சுஜய் கும்கி யானைகள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி கும்டாபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.
ஆனாலும், கருப்பன் யானை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறாக 4 முறை கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டும், கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கோழிகமுத்தி முகாமில் இருந்து மாரியப்பன், சின்னதம்பி கும்கி யானைகள் தாளவாடியை அடுத்த மகாராஜன்புரம் பகுதிக்கு கடந்த 15-ம் தேதி கொண்டு வரப்பட்டன.
கருப்பன் யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில், மகாராஜன்புரத்தில் உள்ள மூர்த்தி என்பவரின் கரும்பு தோட்டத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த கருப்பன் யானையை, ஓய்வுபெற்ற மூத்த கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன், கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், பிரகாஷ், சதாசிவம் தலைமையிலான குழுவினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானை, லாரியில் ஏற்றப்பட்டு, பர்கூர் மலை வனப்பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கர்கேஹண்டி வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.