சென்னை: “மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளர்.
மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, 2010 – 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆணையும் அன்றே பிறப்பிக்கப்பட்டது.
அப்போதிருந்தே கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவர் வழியில் இப்போதைய முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய நேரடி மேற்பார்வையிலேயே மாற்றுத்திறனாளிகள் துறையைக் கவனித்து வருகிறார்.
கருணாநிதி: ஆட்சி பொறுப்பையேற்றதுமே, அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் ஒருவர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டார்.. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இதோடு நின்றுவிடாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1500-ஐ காத்திருப்போர் பட்டியலில் உள்ள 9,173 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மாற்று திறனாளிகள்: இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1,000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதேபோல, உயர்கல்வி பயிலும் 1,000 பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.14,000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் ரூ.1.4 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
முதல்வர் அறிவிப்பு: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி, கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்பன உட்பட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தார்.. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பானது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது..
முதல்வர் பேரவையில், “மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை 2 மடங்கு உயர்த்தபடும். மேலும் ஒரு கால் பாதிப்படைந்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று முதல்வர் அறித்திருக்கிறார்.. இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.