"4-ம் கிளாஸ் படித்த ராஜா".. மோடியை கலாய்த்து கெஜ்ரிவால் சொன்ன குட்டிக்கதை.. அதுக்குனு இவ்வளவு ஓபனாவா..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சட்டமன்றத்தில் நேற்று குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக மதுபானங்களை விற்பதுதான் இந்தக் கொள்கையின் சாராம்சம். எனினும், மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டத்தை அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, இந்த திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா குற்றம்சாட்டினார்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இது, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில், இந்த மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்பேரில் நேற்று முன்தினம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் 9 மணிநேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என வதந்தி பரவின. ஆனால், அவர் கைதாகவில்லை. இந்நிலையில், நேற்று டெல்லி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு குட்டிக் கதை ஒன்றை கூறினார். அவர் கூறியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டில் நடந்த கதை இது. அந்த நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் குழந்தை பிறந்தது. அப்போது அந்தக் குழந்தையை பார்த்த ஜோசியர், “இவன் எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆளும் ராஜாவாக மாறுவான்” எனக் கூறினார். ஒரு ஏழை வீட்டில் பிறந்த குழந்தை எப்படி ராஜாவாக முடியும் என அனைவரும் நினைத்தனர். நாட்கள் உருண்டோடின. அந்தக் குழந்தையும் வளர்ந்தது. அருகில் இருந்த பள்ளியில் அவன் சேர்ந்தான். ஆனால், அந்த பையனுக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை.

அதனால் 4-ம் வகுப்புடன் அவன் படிப்பை நிறுத்திவிட்டான். பின்னர் தனது கிராமத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் அவர் டீ விற்க தொடங்கினான். படிப்பு வராவிட்டாலும் அவனுக்கு இன்னொரு திறமை இருந்தது. அவன் நிறைய பேசுவான். தனது வயதை உடைய குழந்தைகளை சேர்த்துக் கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பான். ஒருநாள், ஜோசியர் கூறியபடியே அந்த பையன் நாட்டுக்கு ராஜாவாக மாறினான். ஆனால் ராஜாவாக மாறினாலும் அவருக்கு படிப்பு இல்லை அல்லவா.. அதனால் தனக்கு முன்னால் உள்ள கோப்புகளை எல்லாம் படிக்காமலேயே கையெழுத்து போட்டார்.

படிப்பறிவில்லாதவர் என அக்கம்பக்கத்தினர் கிண்டல் அடித்ததால், கஷ்டப்பட்டு ஒரு போலி பட்டப்படிப்பு சான்றிதழை ராஜா வாங்கினார். அந்த சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவோருக்கு அபராதங்களையும் விதித்தார். ஒருமுறை, சிலர் அந்த ராஜாவிடம் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தால், நாட்டில் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் எனக் கூறியுள்ளார். ராஜாவுக்கு படிப்பறிவு இல்லையே.. அவர்கள் கூறுவது என்னவென்றே தெரியாமல் ரூபாய் நோட்டுகளை தடை செய்தார். அவ்வளவுதான் நாட்டின் பொருளாதாரமே சின்னாபின்னமானது.

இந்நிலையில்தான், அந்த ராஜாவுக்கு தான் எவ்வளவு நாட்கள் வாழப் போகிறோமா என்ற பயம் வந்தது. இதனால் பணத்தை விரைவாக சம்பாதிக்க நினைத்தார். ஆனால் தனது பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது நண்பர்களுக்கு பல ஒப்பந்தங்களை வழங்கி அவர்களிடம் கமிஷன் பெற்றார். இவ்வாறு தனது நண்பர்களுடன் சேர்ந்த அந்த ஒட்டுமொத்த நாட்டின் செல்வங்களையும் அந்த ராஜா கொள்ளையடித்தார். இவ்வாறு அந்தக் கதையை கேஜ்ரிவால் கூறினார். எனினும், இந்த கதையில் பிரதமர் மோடியின் பெயரை அவர் பயன்படுத்தவில்லை.

மேலும், இந்தக் கதையை முடித்த கேஜ்ரிவால், “இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது.. ஒரு படிப்பறிவில்லாத அரசன் நாட்டை ஆண்டு பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வந்தால் உடனடியாக அந்த அரசனை அரியணையில் இருந்து நீக்க வேண்டும்” எனக் கூறினார். கேஜ்ரிவாலின் இந்தக் கதையை கேட்டு ஆம் ஆத்மி கட்சியினர் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.