`நீயும், உன் அம்மாவும் சாட்சி சொல்ல வரக்கூடாது' – கூலிப்படையை ஏவி மிரட்டிய உறவினர் சிக்கியது எப்படி?

சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா தேவ்நாத் (21). இவர் அயனாவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டு தெருவில் ஸ்டீல் கம்பெனி வைத்து நடத்திவருகிறேன். என்னுடைய பெரியப்பா மகன் ஹரிநாத், என் பெரியப்பாவையும், அவரின் மகளையும் கொலைசெய்ய முயற்சி செய்த வழக்கில், நானும் என்னுடைய அம்மா பொன்னிலாவும் முக்கிய சாட்சிகள்.

அந்த வழக்கில் என்னுடைய அம்மா பொன்னிலா, ஹரிநாத்துக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்லவிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு 8 மணியளவில் நான் கடையில் இருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய சுமார் 20 வயது மதிக்கதக்க இருவர், கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சிமென்ட், கம்பி குறித்து என்னிடம் விசாரித்தார்கள்.

கொலை முயற்சி

நான் அவர்களை உட்காரச் சொன்னேன். அப்போது அவர்கள் செல்போனுக்கு யாரோ பேசினார்கள். அதில் மஞ்சள் சட்டை அணிந்து கருப்பு தொப்பி வைத்திருந்தவன், `நீ ராஜா தேவ்நாத்தா என்று என்னிடம் கேட்டான். அதற்கு நான் ஆமாம் என்று கூறியதும் உன்னுடைய அம்மா பொன்னிலா, ஹரிநாத்துக்கு எதிரா சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது’ என மிரட்டினான். அப்போது நான், `நீங்கள் யார் என்று கேட்டபோது, நான் சொன்னதை மட்டும் கேளு’ என அருகில் இருந்தவன் மிரட்டினான்.

மேலும் கருப்பு சட்டை அணிந்தவன், கத்தியை எடுத்து `உன்னை கொல்லாமல் விட மாட்டேன்’ என்று என் மீது கத்தியை வீசினான். மற்றொருவன் இரும்பு கோடாரியை எடுத்து என் கழுத்தை நோக்கி வெட்ட வந்தான். நான் நாற்காலியை எடுத்து தடுத்து விட்டேன். அந்த வெட்டு பட்டிருந்தால் நான் அங்கேயே இறந்திருப்பேன்.

பின்னர் கடையில் உள்ள ஊழியர்கள் தடுக்க ஓடிவரவே அவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அதில் ஒருவன் கையில் வைத்திருந்த செல்போன், கத்தியை கீழே போட்டுவிட்டு ஓடினான். நாங்கள் அவர்களை துரத்தியபோது தெரு முனையில் இன்னொரு நபருடன் சேர்ந்து ஓடிவிட்டார்கள்.

கைது

நானும் என்னுடைய அம்மாவும் ஹரிநாத்துக்கு எதிராக சாட்சி சொல்ல வரக்கூடாது என்பதற்காக எங்களை கொலைசெய்ய கூலிப்படை அனுப்பிய ஹரிநாத், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஐபிசி 195 A, 307,109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அயனாவரம் போலீஸார், “புகாரளித்த ராஜா தேவ்நாத்தின் பெரியப்பா ஜெய்சிங், அவரின் மகள் சங்கீதா. இவர்கள் இருவரையும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்சிங்கின் மகன் ஹரிநாத் கொலைசெய்ய முயன்றதாக அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹரிநாத், கைதுசெய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கூலிப்படை

இந்த வழக்கில் ராஜா தேவ்நாத், அவரின் அம்மா பொன்னிலா ஆகியோர் சாட்சிகளாக இருக்கின்றனர். அவர்களை மிரட்ட ஹரிநாத் கூலிப்படையை ஏவியிருக்கிறார். இதற்காக கூலிப்படையைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தை விக்னேஷ் என்பவரிடம் சில லட்சம் ரூபாயைத் தருவதாகக் கூறிய ஹரிநாத், சென்னைக்கு கூலிப்படையைச் சேர்ந்த செந்தில், கோகுல் ஆகியோர் வந்து ராஜா தேவ்நாத்தை மிரட்டியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து ஹரிநாத், விக்னேஷ், செந்தில், கோகுல் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். விசாரணையில் விலை உயர்ந்த பைக்குகளுக்கு ஆசைப்பட்டு செந்திலும், கோகுலும் கூலிப்படையினராக செயல்பட்டது தெரியவந்தது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.