விக்ரமின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான ஆச்சரியங்களில் ஒன்று ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் போஸ்டர். டைட்டிலின் கீழே, ‘சேப்டர் 1 – யுத்த காண்டம்’ என்றிருந்தது விக்ரமின் ரசிகர்களை இன்னும் புருவம் உயர்த்த வைத்தது. புதிய வடிவமைப்பிலிருந்த டைட்டிலுடன் போஸ்டர் வெளியானதையடுத்து படம் விரைவில் வெளியாகிவிடும் என்பதே ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்தும், ரிலீஸ் திட்டம் குறித்தும் விசாரித்தேன்.

அதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்…
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் சொன்னார் கௌதம் மேனன். த்ரில்லர் ஜானரான இந்தக் கதை ரஜினிக்குப் பிடித்திருந்தாலும் ஏனோ நடிக்காமல் விட்டுவிட்டார். அந்தக் கதையில்தான் விக்ரம் கமிட் ஆனார். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும் நடித்துள்ளனர்.

துருக்கியில் நடந்த முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம் இதில் துருவா, ஜான், ஜோஸ்வா எனப் பல கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ரிதுவர்மா நடித்துள்ளார். விறுவிறுப்பாகத் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் யார் கண்பட்டதோ தெரியவில்லை, வேகம் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில்தான் மீண்டும் உயிர்பெற்று, கடந்த ஆண்டு படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் சென்னையில் சில நாள்கள் பேட்ச் ஒர்க் வேலைகளும் நடந்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே விக்ரம் டப்பிங்கையும் பேசிக் கொடுத்துவிட்டார். `கோப்ரா’, `பொன்னியின் செல்வன் 1′ படங்களை அடுத்து `துருவ நட்சத்திரம்’ படமும் அப்போதே வெளியாகியிருக்க வேண்டியது.

இந்நிலையில்தான் இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் ஐடியா வந்திருக்கிறது. கௌதம் மேனன் இப்போது நடிப்பில் பிசியாக உள்ளதாலும், அவரது நடிப்பிற்கு வரவேற்பு இருப்பதாலும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்துடன் அதிரடி திருப்பங்களுடன் சேப்டர் ஒன்று நிறைவுபெறுகிறது என்றும், அதுவே இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். அநேகமாக ‘தங்கலான்’ படத்திற்கு முன்னதாகவே ‘துருவ நட்சத்திரம்’ படம் திரைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
வி ஆர் வெயிட்டிங்!