சென்னை:
பத்திரிகையாளர் சந்திப்புகளில் எப்போதுமே கண்ணியமாக நடந்து கொள்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அவரே இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டென்ஷன் ஆகி இருக்கிறார். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நிருபர் ஒருவர் கேள்வி திருமாவளவனை பொறுமை இழக்க செய்தது. என்ன நடந்தது.. பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த போதிலும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பல முறை பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்.
“அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது”
இந்நிலையில், சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது வேங்கைவயல் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினீர்களா என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், ‘வேங்கைவயல் விஷயம் குறித்து ஏற்கனவே பல முறை பேசி இருக்கிறோம். விழிப்பு கண்காணிப்புக் குழுவில் பேசி இருக்கிறோம். சட்டமன்றத்தில் பேசி இருக்கிறோம். இந்த விவகாரத்தில் அங்கு என்ன நடந்திருக்கிறதோ, அதை கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. குற்றவாளியை கைது செய்வதற்கான உறுதியை அளித்திருக்கிறது. நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்றார்.
காலக்கெடு ஏதும் இருக்கிறதா..
அப்போது நிருபர் ஒருவர், “வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.. எதன் அடிப்படையில் நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு திருமாவளவன், “நாள் என்பது பிரச்சினை இல்லை. இத்தனை நாளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என காலக்கெடு எதுவும் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் கூட இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதற்கு ஏதாவது உள்நோக்கம் கற்பிக்க முடியுமா.. சில வழக்குகளில் நிர்வாக சிக்கல்கள் இருக்கலாம். அரசை பொறுத்தவரை தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை” எனக் கூறினார்.
டென்ஷன் ஆன திருமாவளவன்
அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர், “இந்த விவகாரத்தில் நீங்கள் திமுக காரர் போல பேசுகிறீர்களே..” எனக் கூறினார். இதனால் கோபம் அடைந்த திருமாவளவன், “இந்த மாதிரி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. வேறு யாரிடமாவது வச்சுக்கோங்க.. நாகரீகம் இல்லாத பேச்சு இது. நாகரீகம் தவறி பேசாதீர்கள். உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். ஊடகவியாளர்களுக்கு என்ன மரியாதையோ, அந்த மரியாதையை கொடுக்கும் அளவுக்கு கேள்வி இருக்க வேண்டும். திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி யாரும் போராட்டம் நடத்தியது கிடையாது. இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நாங்கள் நடத்தி இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருப்பதால் இப்படி அநாகரீகமாக பேசக்கூடாது” எனக் கூறினார்.
குனிஞ்சு நின்னு பேசணுமா..
அப்போது நிருபர்கள், ஏன் இப்படி ஆவேசமாக கையை நீட்டி பேசுறீங்க..” எனக் கேட்டதற்கு, “எதுங்க ஆவேசம்.. என்னை திமுக காரன்னு கைய நீட்டி சொல்றாரு. நான் திமுக காரனா? இதெல்லாம் அநாகரீகமான பேச்சு. செய்தியாளர்கள் முன்னால கைய நீட்டி பேசக்கூடாதுனா கையை கட்டிக்கொண்டு பேசணுமா.. இல்லனா குனிஞ்சு நின்னு பேசணுமா..? இவ்வாறு திருமாவளவன் கூறினார்.