தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு பல்வேறு விசேஷங்கள் நடைபெற்றாலும், சமயபுரம் பூச்சொறிதல் திருவிழா மற்றும் சித்திரைத் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பொதுவாகக் கடவுளுக்காக பக்தர்கள் பட்டினி கிடந்து விரதம் இருப்பதுதான் வழக்கம். ஆனால், இங்கோ தாய் சமயபுரம் மாரியம்மன் தன் குழந்தைகளுக்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறுவரை 28 நாள்கள் ‘பச்சைப் பட்டினி விரதம்’ இருக்கிறாள்.
பச்சைப் பட்டினி விரதம் தொடங்கும் நாளான மாசி மாதத்தின் கடைசி ஞாயிறுதான் ‘பூச்சொரிதல் விழா’ ஆரம்பமாகும். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாகப் பூக்களை எடுத்துவந்து அம்மனுக்குச் சாத்துவார்கள். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ம் தேதி சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடும், மாலையில் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
சரியாக காலை 10.31 மணிக்கு மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொளுத்திய வெயிலில் ஓங்கி ஒலித்த ‘ஓம் சக்தி, பராசக்தி’ கோஷம் பக்தர்களை சிலிர்க்க வைத்தது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கூடி நிற்க, சமயபுரம் மாரியம்மன் தேர் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருவதைப் போலக் காட்சியளித்தது. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

பக்தர்கள் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதோடு, வழக்கமாக சமயபுரம் வழியே செல்லும் பேருந்துகள் வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பக்தர்கள் பலரும் பால்குடம் தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் கோயிலுக்கு வரிசை கட்டி வந்தபடியே இருந்தனர். சமயபுரம் வரும் வழிநெடுக ஆங்காங்கே நீர்மோர், பானகம், ஜூஸ், அன்னதானம் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தேரோட்டத்தை ஒட்டி எஸ்.பி சுஜித்குமார் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேரோட்டத்தைத் தொடர்ந்து நாளை வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், 20-ம் தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 21-ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது.