புதுச்சேரி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 5ஜி அதிநவீன இணைய சேவை பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 5ஜி சேவையில் பின்தங்கியுள்ள புதுச்சேரியில், 5ஜி இணைய சேவையை அறிமுகம் செய்ய ,அதற்கான உயர்மட்ட கமிட்டி கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இருப்பினும் 5ஜி சேவையில் முன்னேற்றமில்லை.
அதனையடுத்து தற்போது 5ஜி சேவையை துரிதப்படுத்த அரசு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஏற்பட 15 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டியின் சேர்மனாக தலைமை செயலரும், துணை சேர்மனாக வளர்ச்சி ஆணையரும், தகவல் தொழில் நுட்பத் துறை இயக்குநர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வருவாய், பொதுப்பணித் துறை, தொழில், உள்ளாட்சி, மின்துறை, கல்வித்துறை செயலர்கள் உள்பட 13 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு கமிட்டி ஒவ்வொரு துறையிலும், 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள், சாதகமான சூழ்நிலைகளை ஆராய்ந்து செயல்படுத்த உள்ளன.
தற்போது வீடு, கட்டடங்கள் கட்ட, நகர அமைப்பு குழுமத்திற்கு வரைப்படத்துடன் அனுமதிக்காக விண்ணப்பிக்கின்றனர்.
இதில் மின்சாரம், குடிநீர் சம்பந்த விபரங்கள் மட்டுமே இடம் பெறும். அதேபோல் இனிமேல் 5ஜி தொழில்நுட்பம் வீடு, கட்டங்களில் எந்த இடங்களில் இடம் பெறும் என்பதையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். இதேபோல் ஒவ்வொரு துறையும் 5ஜி இணைய சேவையை சம்பந்தமாக முடிவு எடுத்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.
5 ஜி இணைய சேவையை பொருத்தவரை 5ஜி செல்கள் முக்கிய இடங்களில் அமைக்க வேண்டும். அப்போது தான் அங்கிருந்து இணைய சேவையை மற்ற பகுதிகளில் கொடுக்க முடியும். எனவே இந்த 5ஜி செல்களை மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் பொருத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
5ஜி இணைய தொழில்நுட்பம், தற்போதுள்ள 4ஜி எனும் நான்காம் தலைமுறைக்கான தொழில் நுட்பத்தைவிட பலமடங்கு வேகத்தை கொண்டிருக்கும். அதிகவே டவுன்லோடு, அப்லோடு செய்ய முடியும்.
5ஜி தொழில்நுட்பத்தில் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7 ஜி.பி.பி.எஸ்., டவுன்லோடு வேகமும், 3 ஜி.பி.பி.எஸ்., பதிவேற்ற வேகம் இருக்கும். 5ஜி இணை தொழில்நுட்பத்தில் பெரிய கோப்புகளை ஒரு நொடியில் டவுன்லோடு செய்ய முடியும்.
சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், கல்வி வளர்ச்சிக்கு 5ஜி இணைய சேவை பெரிய பங்களிக்கும் என்பதால், அரசு துறைகளுக்கு இடையிலான கமிட்டி முக்கிய உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பிக்க உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்