சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை பெற்றுள்ள ராகுல் காந்தி தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபற்றி எங்களுக்கு அப்பவே தெரியும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவரித்துள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டார். இவர் தலைமையில் தான் கடந்த 2019 தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்தித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தாலும் கூட இந்தியா முழுவதும் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கிய லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ராகுல் காந்தி, ‛‛திருடர்கள் பெயர்கள் ஏன் மோடி என்று முடிகிறது?” என கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையானது. இதையடுத்து மோடி சமுதாயத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக கூறி அவருக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியது.
அதோடு மேல்முறையீடு செய்ய வசதியாக அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இதையடுத்து அடுத்த நாளே தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதாவது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஏப்ரல் 3ல் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதன்பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மேல்முறையீடு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடியானது பற்றி தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இது எதிர்பார்த்த ஒன்று தான். குஜராத் மாவட்ட நீதிமன்றங்கள் குறிப்பிட்ட எல்லையை தாண்டி செயல்பட முடியாது என்பதை யூகித்தோம். ஆனாலும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனென்றால் இந்திய நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. இருப்பினும் சில இடங்களில் பின்னடைவு, சறுக்கல்கள் வருவது உண்டு.
இப்போது சறுக்கல் தான் ஏற்பட்டுள்ளது. இது வீழ்ச்சி அல்ல. எனவே நாங்கள் மேல்முறையீடு செய்வோம். மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் வரை வாய்ப்புள்ளது. அதன்பிறகு மக்கள் மன்றம் உள்ளது. எங்களது தலைவர் ராகுல் காந்தியை பொறுத்தமட்டில் அவர் ஒரு போராளி. வீரர். அவரை சார்ந்து இருக்கும் நாங்களும் அதே மனநிலையில் தான் இருக்கிறோம். சர்வாதிகாரிகளின் ஆட்சியில் இதுபோன்று நடைபெறுவது வழக்கமானது தான். இதனை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.