கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், இந்தத் திருவிழா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த விழாவையொட்டி ஒன்றாகச் சங்கமிக்கும் திருநங்கைகள், தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்திருப்பதோடு, புத்துணர்வைப் பெறுகின்றனர்.
கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, ஏன் திருநங்கைகளுக்கு முக்கியமான திருவிழாவாக பார்க்கப்படுகிறது என்பதற்கான வரலாற்று தகவல்கள் இதோ..!
மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவருக்கு வெற்றி கிடைக்க, ‘எந்தக் குற்றமும் இல்லாத, சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதனை முதல் பலியாக்க வேண்டும்’ என ஆருடம் கூறுகின்றனர்.
பாண்டவர்கள் தரப்பில், அதற்குரிய சாமுத்திரிகா லட்சணம் பொறுந்தியவர்கள்… அர்ஜுனன், ஶ்ரீகிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் மகன் அரவான் (அர்ஜுனன் – நாககன்னிக்கு மகனாகப் பிறந்தவர்) ஆகியோரே. அர்ஜுனனும், கிருஷ்ணரும் இந்தப் போருக்கு முக்கியமானவர்கள் என்பதால், அரவானைப் பலி கொடுக்கலாம் என முடிவு செய்கிறார்கள். அதற்காக அரவானை அணுகி அனுமதி கேட்கும்போது, சில கோரிக்கைகளுடன் அவனும் சம்மதம் தெரிவிக்கிறான். அதில் ஒன்று, ‘தனது இறுதி ஆசையாக, ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை மேற்கொள்ளவேண்டும்’ என்பதாகும்.
உடனே, அரச குலம் தொடங்கி சாமான்யர்கள் வரை எல்லா இடங்களிலும் பெண் தேடுகின்றனர். ஒருநாள் இல்லறம் நடத்திவிட்டு சாகப்போகிறவனுக்கு எப்படிக் கழுத்தை நீட்டுவது… என்று எந்தப்பெண்ணும் அதற்குச் சம்மதிக்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து, அரவானை மணக்கிறார். தனது ஆசைப்படி ஒருநாள் இல்லற வாழ்வுக்குப் பின்னர் பலிக்களம் புகுகிறான் அரவான். கணவனை இழந்த மோகினி விதவைக்கோலம் தரிக்கிறாள். ஆணான ஶ்ரீகிருஷ்ணர், மோகினியாக அவதாரம் எடுத்ததன் அடிப்படையில்… கூவாகம் திருவிழாவின் போது, திருநங்கைகள் தங்களை மோகினியாகக் கருதி தாலி கட்டிக்கொள்கின்றனர்.
மறுநாள் அரவான் பலி கொடுக்கப்பட்டதும், தாலி அறுத்து விதவைக்கோலம் பூணுகின்றனர். உலகப் பிரசித்திப்பெற்ற இந்தத் திருவிழா கூவாகத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு விழா 18-4-2023 மாலை ‘சாகை வார்த்தல்’ நிகழ்வோடு தொடக்கி இருக்கிறது. அன்றைய தினம், கூவாகம் கிராம மக்கள் கூழ் எடுத்துவந்து அம்மனுக்குப் படையலிட்டனர். 19-04-2023 காப்பு கட்டப்பட்ட நிலையில், 18 நாள் உற்சவமும், பாரதம் படிப்பதும் தொடங்கி இருக்கிறது.
மே 2-ம் தேதி இரவு சுவாமி கண் திறக்கப்பட்டதும், கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்து, கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் தங்கள் கணவனை வாழ்த்திப் பொங்கல் வைத்துக் கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ந்திருப்பார்கள். அரவானின் இரவுக் களியாட்டம் பொழுது புலர்ந்து (3-5-2023) முடிவடைந்ததும், நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து கொலைக்களமான அமுதகளம் கொண்டு செல்லப்படும்.
பலியாகப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவார்கள். அமுதகளத்தில் அரவானின் தலை துண்டிக்கப்பட்டதும், திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலியை அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து, வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக்கோலம் கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து, சித்ரா பௌர்ணமியன்று (4-5-2023) தர்மர் பட்டாபிஷேகத்தோடு திருவிழா நிறைவு பெறும். தேரோட்டத்திக்கு முன்பாக திருநங்கைகளுக்கான அழகுப்போட்டியும் நடத்தப்படும்.