அமராவதி: ஆந்திராவிலிருந்து வட மாநிலத்திற்கு வேலைக்காக 47 சிறுவர்கள் ரயிலில் கடத்தி செல்ல முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை சட்டவிரோதமாக கருதப்பட்டாலும் இன்னமும் பல்வேறு மாநிலங்களில் இந்த கொடுமை நீடித்துதான் வருகிறது. காவல்துறையினரும், குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகளும் சேர்ந்து அவ்வப்போது ஆய்வு நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வட மாநிலத்திற்கு குழந்தை தொழிலாளர்களாக கடத்தப்பட இருந்த சுமார் 47 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த சிறுவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை 7 பேர் கொண்ட கும்பல் மும்பைக்கும், செகந்திராபாத்துக்கும் வேலைக்காக அழைத்து செல்ல முயன்றுள்ளது. ஆனால் அதற்குள் ரயில்வே காவல்துறையினரின் உதவியுடன் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் இவர்களை மீட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “இது கோடை விடுமுறை காலம். குழந்தைகளுக்கு பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி சிலர் இந்த சிறுவர்களுக்கு பணத்தின் மீது ஆசையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்காக பல குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்களின் இலக்கு வறுமையில் இருக்கும் குடும்பங்கள்தான். இந்த குடும்பத்திற்கு பணத்தின் மீது ஆசையை ஏற்படுத்தி அவர்களின் குழந்தைகளை தங்களுடன் அழைத்து செல்கின்றனர். இதற்காக குடும்பங்களுக்கு மிகவும் குறைந்த அளவில் தொகை வழங்கப்படும். இவ்வாறு பணம் கொடுத்தும் சம்பாதிக்காத குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் கடத்தப்படுவார்கள். அல்லது சிறுவர்கள் ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்படுவார்கள். இப்படியாக ஆந்திரா முழுவதுமிருந்து சிறுவர்கள் கடத்தி செல்லப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணை அதிகாரிகளுடன் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டோம். சோதனையில் சுமார் 47 சிறுவர்களை நாங்கள் மீட்டோம். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக அவர்கள் வெவ்வேறு இடங்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் இந்த சிறுவர்களை கண்டுபிடித்துவிட்டதை உணர்ந்த சிலர் அங்கிருந்து தப்பி ஓட பார்த்தனர். அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தபோது சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 7 பேர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரித்ததில் தங்களை மும்பை மற்றும் செகந்திராபாத் பகுதிக்கு வேலைக்காக அழைத்துச் செல்கின்றனர் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இப்படி கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 13 குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல மீதமுள்ளவர்களை குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். விரைவில் மீதமுள்ள சிறுவர்களும் அவர்களின் பெற்றோர்கள் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று வரங்கல் ரயில் நிலைய காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மனித கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனித கடத்தலில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்று ஐநா கூறியுள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.