சென்னை : ஹெல்மெட் போடாமல் சாலையில் சென்ற சென்னையை சேர்ந்த காவலரை இடம், நேரத்தோடு, சென்னையைச் சேர்ந்த சிட்டிசன் ஒருவர் புகைப்படம் எடுத்து, அதனை சென்னை போக்குவரத்து போலீசுக்கு டேக் செய்ததால், அந்த காவலருக்கு ஃபைன் கட்ட சொல்லி வீட்டுக்கே நோட்டீஸ் பறந்துள்ளது.
நம்மூரு மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணம்,இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள், சிக்கினால் போலீசுடன் சண்டை தான். ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லையிலே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் பல இடங்களில் ஹெல்மெட் போடுவது இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள்.
சிக்னல் விழுகப்போகிறது என்றால், பாய்ந்து சென்று சிவப்பு சிக்னல் விழுந்தாலும் ஏறி செல்வார்கள். இதல்லாம் இங்க சர்வ சாதாரணம். பள்ளிக்கு குழந்தையைவிட போகும் போது ஹெல்மெட் அணிவதை பார்க்கவே முடியாது. பக்கத்து தெருவிற்கு செல்வதாக இருந்தாலே, வீட்டு பக்கத்தில் எங்காவது செல்வதாக இருந்தாலே பலரும் ஹெல்மெட் போடுவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
என்னப்பா நீட்டி முழக்கிட்டு இருக்க விஷயத்துக்கு வா என்கிறீர்களா.. விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள குறித்து யார் போட்டோ எடுத்து அனுப்பினாலும் அல்லது வீடியோ எடுத்து அனுப்பினாலும், அப்படி மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக பலருக்கு ஃபைன் போடப்பட்டிருக்கிறது. ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சின்னமலை சைதாப்பேட்டை சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.
இதை பார்த்த ஒருவர் உடனே புகைப்படம் எடுத்து, வாகன எண், நேரம், நாள் என்பதை குறிப்பிட்டு, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.