சென்னை: Trisha (த்ரிஷா) பொன்னியின் செல்வன் 2 பட புரோமோஷனை முன்னிட்டு த்ரிஷா அளித்த ஒரு பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், த்ரிஷா இப்படி சொல்லிட்டாங்களே எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாவலில் குந்தவை கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக கல்கி வடிவமைத்திருப்பார்.
குந்தவையில் குவிந்த கவனம்: படம் வெளியானபோது பலரது கவனமும் குந்தவையின் மேல்தான் இருந்தது. த்ரிஷாவின் அழகும், நடிப்பும் அனைவரையுமே ரசிக்க வைத்தது. குறிப்பாக ராஜதந்திரம் மிக்க பெண்ணாக குந்தவை நாவலில் சித்தரிக்கப்பட்டிருப்பார். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக கம்பீரமாகவும், கூரிய சிந்தனை உள்ளவராகவும் த்ரிஷா தனது நடிப்பின் மூலம் அதகளம் செய்திருந்தார். அதே நடிப்பு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பதால் ரசிகர்கள் த்ரிஷாவை ஸ்க்ரீனில் பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.
புரோமோஷனில் கலக்கும் த்ரிஷா: இரண்டாம் பாகம் வெளியாக இன்னமும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதனையடுத்து விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். இவர்க்ளில் த்ரிஷா பலரது ரசனையை ஈர்த்துள்ளனர். குறிப்பாக அவரது காஸ்டியூம்ஸ் ரசிகர்களை கவர; அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
த்ரிஷா கொடுத்த பேட்டி: இந்நிலையில் படத்தின் புரோமோஷனை ஒட்டி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை ப்ளாக் பஸ்டர் ஆக்கிய ரசிகர்களுக்கு நன்றி. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள். நாம் செய்யும் விஷயத்தை நம்பிக்கையோடு சரியாக செய்ய வேண்டும் என மணிரத்னம் அடிக்கடி சொல்வார்.
செம நம்பிக்கையில் இருக்கிறேன்: நான் சூப்பர் கான்ஃபிடன்ஸில் இருக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை நான் படித்திருக்கிறேன். ஆறு மாதங்கள் நாங்கள் பொன்னியின் செல்வனுக்காக உழைத்திருக்கிறோம். ஏராளமான ஒத்திகைகள், ஹோம் ஒர்க்குகள் என கடுமையாக உழைத்தோம். அதுதான் எங்களின் வேலையை எளிமையாக்கியது.
கல்கிக்கு நன்றி ஆனாலும்: குந்தவை பற்றி பொன்னியின் செல்வனில் எழுதிய கல்கிக்கு நன்றி. ஆனால் நான் மணிரத்னத்தின் குந்தவைதான். அதை எப்போதும் பெருமையுடன் சொல்வேன். என்னுடைய பெஸ்ட் கதாபாத்திரங்களில் குந்தவை கதாபாத்திரமும் ஒன்று. மணிரத்னம் படத்தில் நடிப்பதை கொண்டாடுகிறேன். அரசியல் எண்ணமெல்லாம் எனக்கு எப்போதும் இல்லை. இயக்குநர் மணிரத்னத்தின் செட்டில் இருப்பதையே நான் பெருமையாக கருதுகிறேன். பல திறமைசாலிகள் இருக்கும் சினிமாவில் இருப்பது சந்தோஷம்” என்றார்.