சூடான்: சூடானில் மிகக் கடுமையான ஒரு உள்நாட்டு மோதல் நிலவி வரும் நிலையில், அங்கே சிக்கியுள்ள இந்தியர்கள் உணவு, மின்சாரம் கூட இல்லாமல் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சூடானில் துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும் சூடான் ஆயுதப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
அங்கே சில நாட்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அங்கே சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூடான்: ஆப்பிரிக்க நாடான சூடானில் இந்தியர்களும் கணிசமான அளவுக்கு இருக்கவே செய்கின்றனர். இதனிடையே அங்குச் சிக்கியுள்ள இந்தியர்களில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் அங்குள்ள இந்தியர்களின் உறவினர்கள் பதற்றமடைந்துள்ளனர். சூடானில் உள்ள இந்தியர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான போர் என்றால் எதாவது ஒரு நாட்டிடம் பேசி பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், உள்நாட்டுப் போர் என்பதால் யாரிடம் பேச வேண்டும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. எதிர்த் தரப்பே முதலில் தாக்குதல் நடத்தியதாகவும் தாங்கள் வெறும் பதிலடி மட்டுமே தருவதாகவும் இரு தரப்பும் சொல்லி வருகிறது. இதனால் அங்குச் சண்டை ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கண்மூடித்தனமான தாக்குதல்: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இருப்பினும், அங்கே கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு தாக்குதல்கள் ஒரு பக்கம் நடக்கிறது என்றால், மறுபுறம் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குப் பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய தேவைகளே இல்லாமல் அங்குள்ள இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் நடக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவே வெளியுறவு அமைச்சகமும் இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளது. சூடானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, அமீரகம் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுடன் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவதிப்படும் இந்தியர்கள்: சூடான் தலைநகரான கார்ட்டூமில் உள்ள இந்தியர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ள ஆடியோவில், “எங்கள் ஹோட்டலில் ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லை. உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இன்று துணை ராணுவப் படையினரால் ஹோட்டல் மீண்டும் சூறையாடப்பட்டது. கார்ட்டூமின் பெரும்பகுதி மின்சாரம் இல்லாமல் இருக்கிறது.
அதைச் சரி செய்யத் துணை ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. துணை ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.சர்வதேச மத்தியஸ்தத்தின் போது எங்களது பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
அதேபோல அங்கு அடிக்கடி செல்லும் மும்பைவாசி ஒருவர் கூறுகையில், “விமான நிலையம் இரு குழுக்களிடையே மோதல் தளமாக மாறிவிட்டது. இதனால் நான் பல கிமீ அச்சத்துடன் நடந்தே, ஹோட்டலுக்கு வர வேண்டியதாகிவிட்டது. இப்போது நானும் பல இந்தியர்களும் ஹோட்டலில் தஞ்சம் புகுந்துள்ளோம். அதிகாலை தொடங்கினால் நள்ளிரவு வரை துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. மின்சாரம் முழுமையாக இல்லை. இதனால் எங்களால் மொபைலை சார்ஜ் கூட போட முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது” என்றார்.