7G Rainbow Colony 2 Exclusive: செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் இணையும் ரவி கிருஷ்ணா – யுவன்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி அடைந்த படம், `7ஜி ரெயின்போ காலனி’. `காதல் கொண்டேன்’ வெற்றிக்குப் பிறகு, செல்வராகவன் கொடுத்த கிளாஸிக் இது. செல்வாவைப் பிடித்த எல்லோருக்கும் 7ஜியை நிச்சயம் பிடித்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், செல்வராகவனை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் இணைத்த படம். படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 20 வருடங்களாகின்றன. ஆனாலும், 7ஜியின் தாக்கம் குறையவில்லை. 

‘7ஜி ரெயின்போ காலனி’

ரவி கிருஷ்ணா – சோனியா அகர்வால் காட்சிகள் இன்றைக்கும் இன்ஸ்டாவில் சுழலும் லவ் கன்டென்டுகள். தவிர, ரவி கிருஷ்ணா கிரிக்கெட் விளையாடும் காட்சி, ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடலை குரூப்பாக பாடி அட்ராசிட்டி செய்யும் காட்சி ஆகியவை மீம் மெட்டீரியல்கள். “பின்ன, ஹீரோ ஹோண்டால வேலை கிடைக்கிறதுனா சும்மாவா? இவனுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்… அடி போடி என் பையன் ஹீரோ ஹோண்டால வேலை பார்க்குறான்” என அப்பா பெருமிதப்படும் காட்சி, முதல் நாள் வேலைக்குச் சேர்ந்த 90ஸ் கிட்ஸ் பசங்க இன்றும் வைக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ். செல்வராகவன் – யுவன் – நா.முத்துக்குமார் என ஜீனியஸ்கள் சேர்ந்து நெய்த தரமான கிளாஸிக் படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இப்போது அதனுடைய இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. 

ஆம்! `புதுப்பேட்டை 2′, `ஆயிரத்தில் ஒருவன் 2′ அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த செல்வாவின் ரசிகர்களுக்கு அவர் தரவிருக்கும் சூப்பர் அப்டேட் `7ஜி ரெயின்போ காலனி 2′. ரவி கிருஷ்ணாதான் இதிலும் ஹீரோவாக நடிக்கிறாராம். இதற்காக உடல் எடையைக் குறைத்து தயாராகி வருகிறார் என்கின்றனர்.

2011ல் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்குப் பிறகு, அவர் நடிக்கவிருக்கும் படம் இது. முதல் பாகத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான் இந்தப் பாகத்தையும் தயாரிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. ஹீரோயின் யார் என்பது மட்டும் விரைவில் தெரியவரும் என்கிறார்கள்.

‘7ஜி ரெயின்போ காலனி’

தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடிகள் என்ற பட்டியல் எடுத்தால் நிச்சயம் ‘7ஜி ரெயின்போ காலனி’ கதிர் – அனிதா கதாபாத்திரங்கள் இருக்கும். அனிதா முதல் பாகத்தில் இறந்துவிட்டதால் இந்த இரண்டாம் பாகம் வேறொரு கதையாக இருக்குமா அல்லது அனிதா இறந்த பிறகு, கதிரின் வாழ்க்கையில் நடக்கும் கதையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஜூன் மாதத்திலிருந்து இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. வெகு விரைவில் ஹீரோயின் யார் என்பதுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.  

7ஜி ஃபேன்ஸ் கெட் ரெடி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.