பாஜக-வை ‘பதம்’ பார்த்ததா இடஒதுக்கீடு தனித் தீர்மானம் – திமுக நகர்வின் பின்னணி என்ன?!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முந்தினம் (ஏப்-19) தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான பின்னணி குறித்துப் பேசிய ஸ்டாலின், “ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிட வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும் மேம்பாடும் கிடைக்கும்.

ஸ்டாலின்

மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு கடிதம் எழுதி தொடர்ந்து இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில். பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

தமிழ்நாடு சட்டமன்றம்

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990ஆம் ஆண்டு பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும் மதம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

இதற்குப் பிறகு தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்தார். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறித்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பெரும்பாலான கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தே பேசினார். பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, “இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது’ என்று கூறினார். பிறகு அவர் பேசிய சில வாசகங்கள் சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “பட்டியலின மக்கள் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறினாலும் தீண்டாமை தொடரும் என தி.மு.க அரசு மறைமுகமாகச் சொல்கிறதா” என விமர்சித்தார். அதோடு, “நீதிமன்ற வரம்புக்குள் இருக்கும் இந்த விவகாரத்துக்கு எதற்குத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என்றும் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பினார்.

வானதி சீனிவாசன்

இவரை தொடர்ந்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை என தி.மு.க கூறும்போது அவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் என கேள்வியெழுப்பி, இந்தத் தனித் தீர்மானத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

“மத்திய அரசு இப்போதைக்கு இது தொடர்பாக எதுவும் செய்யாது. மாநில அரசு ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதுதான் ஒரே தீர்வு” என்கிற கருத்தை முன் வைக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார்.

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்

இதை எதிர்க்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “ஆதி திராவிட கிறிஸ்தவர்களில் தேவேந்திர குல வேளாளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு பட்டியலின இட ஒதுக்கீடே வேண்டாம் என்கிறோம். அப்படியிருக்கும்போது இதெல்லாம் தேவையில்லாத தீர்மானம். ஏற்கனவே முன்னேறியவர்களை பின்னிழுக்கும் தீர்மானம் இது. எனவே இதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய, தம் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் வழியில் அம்பேத்கரிய சட்ட வெளிச்சத்தோடு வகுப்புரிமைக் கோரிக்கையை வென்றெடுக்க பாடாற்றிய வே. ஆனைமுத்து அவர்களின் எல்லா எழுத்துப் பணிகளுக்கும் துணை நின்ற அவருடைய அரசியல் மாணவர் பேராசிரியர் முனைவர் முத்தமிழ், “அரசமைப்பு சட்டப்படி சாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு. மத அடிப்படையில் இல்லை. ஆனால், பிற்படுத்தப்பட்டோரில் சில இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வருகிறார்கள். அப்படி இருக்கும் சூழல் தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாக மாறும் போது இவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அப்படி இல்லாமல், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர் என சான்றிதழ் கொடுத்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு பிரதிநிதித்துவம் உருவாகும். மதம் மாறினாலும் அவர்கள் இழிவு ஒழிய போவதில்லை. அந்த ஊரில் வேண்டுமானால் சமூக இழிவு ஒழியும். ஆனால், பொருளியல் மாற்றம் வந்துவிட போவதில்லை.

பேராசிரியர் முனைவர் முத்தமிழ்

ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டையே நீர்த்து போக செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள் மத்திய பா.ஜ.க அரசு. அப்படி இருக்கும் போது, கருணாநிதி காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த கோரிக்கை இப்போது முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருப்பது நல்லதொரு முன்னெடுப்பு. ஆனால், இதை தமிழ்நாடு அரசு உடனடியாக வென்றுவிடும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் கிடையாது. ஏனென்றால் மத்திய அரசின் சட்டத்திருத்ததில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் இன்று பொது நிறுவனங்கள் எல்லாம் தனியாராக மாறி வரும் நிலையில், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான கோரிக்கைகள் எவ்வளவு கொண்டு வந்தாலும், ஒரு பக்கம் அந்த பொறுப்புகளில் இருந்து அரசு விலகி கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல், ‘எல்லோருக்குமான சமமான வளர்ச்சி’ என்பதை நடைமுறைபடுத்த எல்லா இடங்களிலும் இட ஒதுக்கீடு தேவை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.