12 மணிநேர வேலை: `தொழிலாளர்கள் விரோத சட்டமா?’ – சட்டசபை விவாதத்தில் நடந்தது என்ன?!

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள். எனவே, அறிமுகம் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் தொடர்பாக விவாதம் நடைப்பெற்றது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 12-ம் நாள், `1948 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா’ தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை ஆரம்ப நிலையிலேயே சிபிஎம், சிபிஐ கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

இந்த நிலையில், இன்று விவாதிக்கப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவை ஆளுங்கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சியைத் தவிர்த்த மற்ற கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சரின் பதிலுரையைப் புறக்கணித்து அதிமுக வெளிநடப்பி செய்ததால், அவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தொழிற்சாலை சட்டம்

சட்டம் சொல்வதென்ன?

தொழிற்சாலை பணிநேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்துக்கு உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வாரம் 48 மணிநேரம் பணியை, ஒரு நாளில் 12 நேரம் வேலை என தலா 4 நாட்களுக்கு வேலைப் பார்த்துவிட்டு, 3 நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

யார் எதிர்ப்பு?

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாரதிய ஜனதா கட்சி,  ஓ பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் என பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் பேசியது என்ன?

நாகை மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

“தொழிலாளருக்கு விரோதமாகவும், எட்டு மணி நேர வேலை என்பதை நீர்த்துப்போக செய்யும் இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட் சார்பாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டத்தை கொண்டு வரக்கூடாது.”

நாகை மாலி

செல்வப் பெருந்தகை, சட்டமன்ற தலைவர், காங்கிரஸ்

“இந்தச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டச் சட்டம். இதைக் கொண்டு வந்தால் நாம் மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக அர்த்தம். எட்டு மணி நேரம் வேலை என்பதற்கு இது பெரும் ஆபத்தாக இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொழிலாளர்கள் நலன் காக்க நலவாரியம் அமைத்தார். ஆனால் இது, அதனை முற்றிலும் சிதைக்கும். மேலும், இது அம்பானி, அதானி போன்ற பெரும் நிறுவன முதலாளிகளுக்கு சாதகமாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம், எனவே இதை நாங்கள் எதிர்க்கிறோம்.”

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன், பாஜக

“தொழிலாளர்கள் நலனை பாதிக்காத வகையில் இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.”

சிந்தனை செல்வன், விடுதலைகள் சிறுத்தை கட்சி

“1948-ம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தைத் திருத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது. தற்போது 2023-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சாலை திருத்தச் சட்டத்தைத் திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நூற்றாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் தொழிலாளர்கள் நலனை, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பெரும் நிறுவனங்கள் சிதைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.”

ஓ பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர்.

“தொழிற்சாலைகளைப் பாதுகாக்க வேண்டிய அதே நேரத்தில் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். எனவே இதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.”

 இதனைத் தொடர்ந்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்

இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கமளித்தார். அவர், “1948-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டம் என்பது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மாதாந்திர மற்றும் தினசரி வேலை நேர வரைமுறை,  வாராந்திர விடுப்பு என தற்போது உள்ள அனைத்து நடைமுறைகளும் தொடரும். இந்தச் சட்டத்திருத்தம் என்பது தொழில் சாலைகளில் தொழிலாளர்களின் அனுமதியுடன் மட்டுமே பின்பற்றப்படும்.

சி.வி.கணேசன்

தொழிலாளர்கள் இந்தச் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அரசு இதை மறுபரிசீலனை செய்துதான் நடைமுறைப்படுத்தும். திமுக ஆட்சி என்பது தொழிலாளர்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் நிறைவேற்றாது” என்றார்.

இது குறித்து விளக்கமளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தொழிற்சாலையிலே ஒரு நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்னும் அடிப்படையில்தான் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை நோக்கிப் பெரு நிறுவனங்கள் வருகின்றனர். குறிப்பாக மின்னணு நிறுவனங்கள் இதுபோன்ற ஒரு நெகிழ்வுத் தன்மை எதிர்ப்பார்க்கிறார்கள்.

தங்கம் தென்னரசு

தவிர, மத்திய அரசு கொண்டு வந்தததால் இந்தச் சட்ட திருத்தம் தமிழகத்தில் கொண்டுவரப்படவில்லை. இப்போதே இது நடைமுறைக்கு வராது. ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, இது சார்பான ஆய்வுகள் நடத்தப்படும். தமிழக அரசு அனுமதிக்கும் கொள்கையின் அடிப்படையில் தான் மாற்றங்கள் செய்யப்படும். தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டால் 12 மணி நேரம் வேலை செய்யலாம். இல்லையெனில் இது கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.

துரைமுருகன்

தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடம் எங்கே இருக்கிறது? அதற்கு போக்குவரத்து வசதி என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து தான் இந்த 12 மணி நேர வேலை என்பது உறுதி செய்யப்படும்” என்றார்.

இதனை விமர்சித்து பேசிய நாகை மாலி, “தொழில்துறை அமைச்சர் கூறும் பொழுது விருப்பப்பட்டு தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்கிறார். அதுதான் தற்போது  OT என்னும் நடைமுறையில் அனைத்து தொழிற்சாலையில் இருக்கிறதே” என்றார்.

இதற்கு விளக்கமளித்த அவை முன்னவர் துரைமுருகன், “இந்த முறையை தொழிற்சாலைகளில் கொண்டு வந்தால் தொழிலாளர்கள் உரிமை பறி போய்விடும் என அச்சப்படுகின்றனர். தோழமை கட்சிகளின் கருத்துக்களும் மதிக்கப்படும். இந்தச் சட்டத்திருத்தால், வரும் காலத்தில் பிரச்னை ஏற்பட்டால் நிச்சயம் பரிசீலிக்கப்படும். காரணம், எட்டு மணி நேரம் என்பது தொழிலாளர்களின் பிறப்புரிமை. எனவே, அதில் திமுக ஆட்சி நிச்சயம் எந்த மாற்றமும் செய்யாது. ஒரு தொழிலாளருக்கு பிரச்னை ஏற்பட்டாலும் முதல் குரலாக ஒலிப்பது தமிழக முதலமைச்சரின் குரல்தான். எனவே பாதிப்பு இருப்பதைச் சுட்டி காட்டினால் நிச்சயம் பரிசீலிக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.