வாஷிங்டன்: ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா உலகிலேயே பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையுடையது. அவ்வப்போது ராணுவத்தில் நவீன ஆயுதங்களை இணைத்துக் கொண்டே இருக்கும் சீனா தற்போது சூப்பர்சோனிக் ஸ்பை ட்ரோன்களை தயார் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூப்பர்சோனிக் ட்ரோன்கள் ஒலியைவிட மூன்று மடங்கு வேகமாகப் பறக்கக் கூடியது.
உக்ரைன் போர் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிய ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பின் ஆவணங்களில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியே கசிந்தன. இதில் சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளை அமெரிக்கா கணித்துள்ள தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதில், “எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு சூப்பர்சோனிக் உளவு ட்ரோனை உருவாக்கவும், பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. WZ-8 என்று அழைக்கப்படும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் உளவு ட்ரோன், செயல்பாட்டளவில் ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையி பத்திரிகை செய்தியில், சீனா உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் ஸ்பை ட்ரோன்கள் ஷாங்காய் நகரில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விமானப்படை தளத்தில் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ராணுவம் (பிஎல்ஏ) கிட்டத்தட்ட தனது முதல் சூப்பர்சோனிக் ஸ்பை ட்ரோன்களை படைப்பிரிவில் நிலை நிறுவிவிட்டது. இது சீன ராணுவத்தின் கிழக்கு கமாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கிழக்கு கமாண்ட் தைவான் எல்லையை ஒட்டி உள்ளது.
தைவான் மற்றும் சீனாவின் பிரதான நிலப் பகுதிக்கு இடையே ராணுவ பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் உளவுத் துறை தொடர்பான ஆவணத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.