விப்ரோ கன்ஷுமர் கேர் அண்ட் லைட்டிங் நிறுவனம் கேரளாவை சேர்ந்த பேக்கேஜ் செய்யப்பட்ட பிரபல உணவு நிறுவனமான பிராமின்ஸ் ஃபுட்ஸை வாங்க நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. சந்தூர் சோப் மற்றும் யார்ட்லி டால்க் போன்ற பிரபலமான பிராண்டுகளுக்கு பெயர் பெற்ற பெங்களூரை தளமாகக் கொண்ட விப்ரோ நிறுவனம் பிராமின்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் வணிகத்தில் தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டுதான் பாக்கெட் உணவுப் பொருள் பிரிவில் கால்பதித்தது. அப்போதும் கேரளாவை சேர்ந்த நிராபரா என்ற நிறுவனத்தை வாங்கியது. தற்போது வாங்கியுள்ள பிராமின்ஸ் தயாரிப்பு பொருள்களை அதன் பாரம்பரியம் மாறாமல் சந்தையில் விரிவுப்படுத்தும் நோக்கில் விப்ரோ இந்நிறுவனத்தை வாங்கியுள்ளது. விப்ரோ நிறுவனம் 2022-23-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டியது.
இந்திய பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுச் சந்தை, சுமார் ₹5 லட்சம் கோடி மதிப்புடையது, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பிராண்டட் இல்லாத பொருள்களில் இருந்து பிராண்டட் பொருள்களுக்கு மாறுவதால் இந்த துறை வளர்ச்சியில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த போக்கு பல பெரிய நிறுவனங்களைத் தங்கள் தயாரிப்புகளை பன்முகப்படுத்தவும் உணவுத்துறையில் தங்கள் சலுகைகளை விரிவுப்படுத்தவும் தூண்டியுள்ளது.
1987-ம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட பிராமின்ஸ் நிறுவனம் ரெடி டு குக், மசாலா, ஊறுகாய், கோதுமை உள்பட பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் சைவ உணவுப் பொருள்களை விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.