தெய்வ மச்சான் விமர்சனம்: சுவாரஸ்ய ஒன்லைன், ஆனால் டெம்ப்ளேட் காட்சிகள் – மச்சான் சிரிக்க வைக்கிறானா?

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார் `தபால்’ கார்த்தி. அவரின் தங்கையான குங்குமத்தேனுக்குக் கல்யாண வரன் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போகிறது. இறுதியாக, தங்கைக்குப் பிடித்த சம்பந்தம் அமைய, அண்ணன் `தபால்’ கார்த்தியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைக்கிறார்கள். மறுபுறம், கார்த்தியின் கனவில் வரும் `சாட்டைக்காரன்’, அடுத்து மரணிக்கப் போகிறவர்களின் பெயர்களைச் சொல்ல, அதன்படியே மரணங்கள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில், தங்கையின் கணவனும் இறக்கப் போவதாகச் சொல்கிறார் சாட்டைக்காரன். செய்வதறியாது உடைந்துபோகிறார் கார்த்தி. தன் தங்கையின் கணவனான மச்சானை மரணத்திலிருந்து காப்பாற்றினாரா, அந்தக் கனவுகளுக்குக் காரணம் என்ன என்பதைக் கலகலப்பான கிராமத்துக் கல்யாண வீட்டைக் கதைக்களமாகக் கொண்டு சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார்.

தெய்வ மச்சான்

விமலுக்குக் கைவந்த ‘கிராமத்துச் சாமானிய இளைஞன்’ கதாபாத்திரத்தில் அழகாகப் பொருந்திப்போகிறார். அதேநேரம், புதுமைகள் இல்லாத பார்த்துப் பழகிய கதாபாத்திரம் என்பதாலும், மொத்தப் படத்தையும் தாங்க வேண்டிய பொறுப்புகொண்ட கதாபாத்திரம் என்பதாலும், நடிப்பில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். அது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கதாநாயகியாக நேஹா ஜா, மூன்று காட்சிகளில் மட்டும் முகம் காட்டுகிறார். பின் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டாக மாறிவிடுகிறார். தங்கை குங்குமத்தேனாக வரும் அனிதா சம்பத், தன் கிராமத்துத் தோற்றத்தாலும், எள்ளலான பேச்சாலும் கவனம் ஈர்க்கிறார். படத்தில் இது முக்கியமான கதாபாத்திரம்தான் என்றாலும், இன்னும் அழுத்தமான காட்சிகளால், அண்ணன் – தங்கை பாசத்திற்கு வலுசேர்த்திருக்கலாம்.

பால சரவணனின் ஒன்லைன் காமெடிகள் சில இடங்களில் சொதப்பினாலும், மற்ற இடங்களில் சிரிப்புப் பட்டாசு கொளுத்துகிறது. வெகுளியான, வில்லங்கமான கதாபாத்திரத்தில் தீபா, தன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பாண்டியராஜன், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ‘கிச்சா’ ரவி ஆகியோரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். கலகலப்பான படத்திற்குப் பாண்டியராஜனின் அப்பாவித்தனத்தையும் சேட்டைகளையும் பயன்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குநர். மச்சானாக வரும் வத்சன் வீரமணி, தன் பணியைக் குறைவின்றி செய்திருக்கிறார்.

விமல் – தெய்வ மச்சான்

காட்வின் ஜெ.கோடனின் பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னணி இசையில் படத்திற்கு ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஸ். அய்யம்பாளையத்தின் எழிலை தன் கேமராவில் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜெ. அலெக்ஸ். ஒரு காமெடி படத்துக்குத் தேவையான பணியைப் படத்தொகுப்பாளர் எஸ்.இளையராஜா செய்திருக்கிறார்.

‘அடுத்து நிகழவிருக்கும் மரணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் கதாநாயகன்’ என்ற ஒன்லைனை, ஒரு கல்யாண வீட்டில் நடக்கும் களேபரங்கள் வழியாக காமெடியாகச் சொல்ல நிறைய இடங்கள் இருந்தும், அப்பாவி ஹீரோ, அண்ணன் – தங்கை பாசம், ஜாலியான அப்பா, சம்பிரதாய கதாநாயகி எனப் பழகிய டெம்ப்ளேட்டை மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில், கல்யாண வீடு, மாமா – மச்சான் என இறங்கி விளையாட நிறைய இடங்கள் இருந்தும், சுமாரான, செயற்கையான காட்சிகளால் அதை வீணடித்திருக்கிறார்.

தெய்வ மச்சான்

யூகிக்கும்படியான திருப்பங்களால் திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது விமல் – பால சரவணனின் காமெடி கூட்டணிதான். படம் டல்லடிக்கும்போதெல்லாம், விமல், பால சரவணன், தீபா ஷங்கர், காமெடிக்கு வரும் துணைக் கதாபாத்திரங்கள் என யாரோ ஒருவர் ஒரு காமெடியைப் தூவி சரி செய்துவிடுகிறார்கள். காட்சித் தொகுப்பாகப் பார்த்தால், ஜமீன் வீட்டிலிருந்து பெண் பார்க்க வருவது, மச்சானைப் பாதுகாக்க விமல் செய்யும் சேட்டைகள், வேட்டைக்காரன் உடனான சின்ன சண்டைகள் போன்றவை சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி, சிரிப்பலையை உருவாக்குகின்றன.

வழக்கமான பாதையில் பயணிக்காமல், சுவாரஸ்ய ஒன்லைனுக்கு ஏற்றவாறு இறங்கி அடித்திருந்தால் `தெய்வ மச்சான்’ நமக்கும் நண்பனாகி இருப்பான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.