தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு;
கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியமைக்காக பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று (22.4.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகிற போது, இச்சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலித் கிறிஸ்துவ மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய ஒரு மாநாட்டை நடத்தி அதில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறபோது, தேர்தல் ஆதாயங்களைப் பற்றி கவலைப்படாமல் சமூகத்தின் நியாயங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்ற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார் என்றும், இவ்வரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் தேவாலயப் பணியாளர்களுக்கு வாரியம் அமைத்தது, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தலித் கிறிஸ்துவருக்காக இவ்வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை
சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக அனைத்து கிறிஸ்துவர்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தலித் கிருத்துவ விடுதலை முன்னணி தலைவர் பேராசிரியர் மேரிஜான் பேசுகிற போது, தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாப்பை, இட ஒதுக்கீடை வழங்க வேண்டும் என்று மிகத் தெளிவாக, வலுவாக எடுத்துரைத்து, தலித் கிறிஸ்தவர்களின் துயரை துடைத்திடும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு தலித் கிறிஸ்துவ சமுதாயம் என்றும் கடமைப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் பேசும்போது, நம் எல்லோருக்கும் ஒரு புது நம்பிக்கையை, புது விடியலை கொடுக்கின்ற விதத்திலே, தலித் கிறிஸ்தவர்களும் பட்டியலினத்திலே சேர்க்கப்பட வேண்டும், அவர்களுக்கு மற்ற பட்டியலினத்தவற்கு கிடைக்கின்ற உரிமைகளும், சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியமைக்காக அனைவருடைய சார்பாகவும் முதலமைச்சருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
தென்னிந்திய திருச்சபைகள் மாமன்ற செயலாளர் பெர்னான்டஸ் ரத்தினராஜா பேசுகிறபோது, வரலாற்று
சிறப்புமிக்க இத்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசிற்கு தமிழகத்திலிருந்து அழுத்தம் வருகின்ற பொழுது, திராவிட மாடல் ஆட்சியில் இருந்து அழுத்தம் வருகின்ற பொழுது, அது வெற்றியாக முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை என்று தெரிவித்து தனது நன்றியை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார் என அதில் கூறப்பட்டுள்ளது.