“உயிரைக்கூட கொடுப்பேன், ஆனால்…” – மம்தா பானர்ஜியின் ரம்ஜான் உறுதிமொழி 

கொல்கத்தா: “வெறுப்பு அரசியலைக் கடைபிடிப்பதன் மூலமாக சிலர் நாட்டை பிளவுபடுத்த முயல்கின்றனர். நான் எனது உயிரைக் கூட விடுவேன், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மட்டேன்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை (ஏப்.22) கொல்கத்தாவில் நடந்த சிறப்புத் தொழுகைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது: “வங்கத்தில் நாம் அமைதியை விரும்புகிறோம். நமக்கு கலவரங்கள் தேவையில்லை; அமைதியே வேண்டும். சிலர் வெறுப்பு அரசியல் நடத்துவதன் மூலமாக நாட்டை பிளவுபடுத்த விரும்புகின்றனர். நான் என் உயிரையும் தரத்தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன். பணபலம் மற்றும் (மத்திய) புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக நான் போராடத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு போதும் அவர்களுக்கு அடிபணிய மாட்டேன்.

யாரோ ஒருவர் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளை பிரிப்பதாக கூறுகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லுகிறேன். பாஜகவுக்காக யாராலும் முஸ்லிம் வாக்குகளை பிரிக்க முடியாது.

இன்னும் ஒருவருடத்தில் அடுத்து நாட்டில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்வோம். வரும் தேர்தலில் அந்தப் பிரிவினை சக்திக்கு எதிராக வாக்களிப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றத்தவறினால் நாம் உறுதியாக அனைத்தையும் இழந்துவிடுவோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் பேசிய மேற்குவங்க முதல்வர், தனது பேச்சில் பாஜக மற்றும் அசாசுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியைக் கடுமையாக சாடினார். பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அசாசுதீன் ஓவைசி முஸ்லீம் வாக்குகளைப் பிரிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அவர், ஓவைசியை ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கும் பாஜக நண்பர் என்று சாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.