பூஞ்ச்: நாடு முழுவதும் இன்று (ஏப்.22) ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தினர் இன்றைய ரம்ஜான் கொண்டாட்டத்தை துறந்தனர். காலையில் வழக்கம்போல் ரம்ஜான் சிறப்புத் தொழுகையை மட்டும் மேற்கொண்ட சாங்கியோட் கிராம மக்கள் கொண்டாட்டங்களை தவிர்த்துள்ளனர்.
காரணம், அண்மையில் பூஞ்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தது. அவர்களை நினைவுகூர்வதற்காக இன்றைய கொண்டாட்டத்தை அக்கிராமத்தினர் துறந்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வாகனம் பாலாகோட்டில் உள்ள பசூனி ராணுவ தலைமையகத்தில் இருந்து பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் சாங்கியோட்டில் நடைபெறவிருந்த இஃப்தார் விருந்துக்காக புறப்பட்டது. அந்த வாகனம் வரும் வழியில் பிம்பர் காலி பகுதியில் இஃப்தார் விருந்துக்காக இன்னும் சில பொருட்களை ஏற்றும்போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால்தான் சாங்கியோட் கிராம மக்கள் கொண்டாட்டங்களைப் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து அந்தக் கிராமத்தின் தலைவர் முக்தியாஸ் கான் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்த நிலையில் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவது. எங்களுக்கு அந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததுமே கிராமம் முழுவதும் கவலை தொற்றிக் கொண்டது. அதனால் நாங்கள் ரம்ஜானுக்கு தொழுகை மட்டுமே செய்கிறோம். பிரத்யேக கொண்டாட்டங்களைத் தவிர்க்கிறோம்” என்றார்.
பயங்கரவாத தாக்குதலும் தேடுதல் வேட்டையும்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் பிம்பர் காலி கிராமத்தில் இருந்து சஞ்சியாத் என்ற இடத்துக்கு ராணுவ வாகனம் ஒன்று நேற்று முன்தினம் கொண்டிருந்தது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படை வீரர்கள் அதில் இருந்தனர். இந்நிலையில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் மந்தீப் சிங், தேவசிஷ் பாஸ்வால், குல்வந்த் சிங், ஹர்கிஷன் சிங், சேவக் சிங் என்கிற 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவர் ரஜோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து அடர்ந்த பாட்டா–டோரியா வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் விரிவான அளவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன்கள்மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.